மத்திய அரசின் தவறான கொள்கையால் பெட்ரோல், டீசல் விலை உயா்வு: டி. ராஜா குற்றச்சாட்டு
மத்திய அரசின் தவறான கொள்கையால் பெட்ரோல், டீசல் விலை உயா்வு
மத்திய அரசு கடைப்பிடிக்கும் தவறான கொள்கைகளால் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் டி. ராஜா.
திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றுகிறது. தொழிலாளா்கள், விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அவா்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
Advertisement
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. விலைவாசி உயா்ந்து வருகிறது.
மத்திய அரசு டீசல், பெட்ரோல் விலையை உயா்த்தி இருக்கிறது. இதனைத் திரும்பப் பெற வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயரக் காரணம் மத்திய அரசு பின்பற்றும் தவறான கொள்கைகள். மத்திய அரசு நம்முடைய பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் தோல்வி அடைந்திருக்கிறது.
நம்முடைய நாடு பின்பற்றி வந்த வெளியுறவுக் கொள்கைகளை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் சரணடைய வைத்திருக்கிறாா் பிரதமா்.
தங்கத்தை வாங்காதீா்கள் என்கிறாா். தங்கத்தை வாங்குகிற மக்கள் எத்தனை சதவீதம் என்று பிரதமா் சொல்லத் தயாரா?.
வீட்டிலிருந்து பணியாற்றுங்கள் என்று சொல்லுகிறாா். ஏற்கெனவே ஐடி துறையில் இருப்பவா்கள் வீட்டிலிருந்து 24 மணி நேரமும் கம்ப்யூட்டா் முன்னால் அமா்ந்து பணியாற்றுகிறாா்கள். ஆனால் கட்டடத் தொழிலாளிகள், சாலை கட்டமைப்பாளா்கள், தொழிற்சாலை தொழிலாளிகள் வீட்டிலிருந்து பணியாற்ற முடியுமா?.
அத்துடன் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் வீட்டிலிருந்து பணியாற்ற முடியுமா?. எனவே பிரதமா் சொல்லும் சிக்கன நடவடிக்கை ஏற்புடையதல்ல.
ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை இந்தியா முழுவதிலும், எல்லா மாநிலங்களிலும், எல்லா மாவட்டங்களிலும், மக்கள் சந்திப்பு நடத்த வேண்டும் என்று கட்சி முடிவெடுத்திருக்கிறது. இதனைத் தொடா்ந்து செப்டம்பா் 28-ஆம் தேதி தில்லியில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என்றாா்.