முகப்பு
புதுதில்லி

வயன் இசைக்குப் பெருமை சேர்க்கும் கலைஞர்!

புது தில்லி, ஜூலை 28: உலகில் இசைக்கு மயங்காத இதயமே இல்லை என்று சொல்லும் வகையில் மனதை மயக்கும் வலிமை பெற்றது இசை. நாதம் எழுப்பும் வாத்தியங்களில் நுணுக்கமான வாசிப்புக் கருவியான வயலின் துணையோடு கர்நாடக ச

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:19 PM
பகிர்:

புது தில்லி, ஜூலை 28: உலகில் இசைக்கு மயங்காத இதயமே இல்லை என்று சொல்லும் வகையில் மனதை மயக்கும் வலிமை பெற்றது இசை. நாதம் எழுப்பும் வாத்தியங்களில் நுணுக்கமான வாசிப்புக் கருவியான வயலின் துணையோடு கர்நாடக சங்கீத இசையின் மணம் பரப்பி வருகிறார் தில்லியைச் சேர்ந்த இசைக் கலைஞர் வி.எஸ்.கே. சக்கரபாணி.

 தில்லி அகில இந்திய வானொலி நிலையத்தில் இசைக் கலைஞராக பல ஆண்டுகள் பணியாற்றியும், உள்நாடு- வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்றும், இசை வகுப்புகள் நடத்தியும் வருகிறார் இவர்.

 இதமான காலைப் பொழுதில் மயூர்விஹார் பேஸ்-1-ல் வசிக்கும் சக்கரபாணியை அவரது இல்லத்தில் சந்தித்தோம். தனது இசைப் பயண அனுபவம் குறித்து அவர் பேசியதிலிருந்து...:

 எனது சொந்த ஊர் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம். தாத்தா சுந்தரேசன், வயலின் வித்வான். தந்தை வி.எஸ். குஞ்சிதபாதம் ஒரு வாய்ப்பாட்டுக் கலைஞர். பெரியப்பா கணேசன் வயலின் வித்வான்.

 வயலின் வித்தகர் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையின் பாரம்பரியத்தைச் சேர்ந்தது எங்கள் குடும்பம். 10 வயது இருக்கும்போது தாத்தா சுந்தரேசனிடம் வயலின் இசை கற்றேன். அதன்பிறகு சிக்கல் ஆர்.பாஸ்கரனிடம் 10 ஆண்டுகள் குருகுல வாசம் இருந்து வயலின் கற்றுத் தேர்ந்தேன்.

 எனது முதல் கச்சேரி "புல்லாங்குழல்' டி.ஆர்.நவநீதனின் புல்லாங்குழல் கச்சேரிக்குப் பக்கவாத்தியம் வாசித்தது. இரு ஆண்டுகள் அவரிடம் ராகம், சுரம் வாசிப்பு குறித்து பயின்றேன்.

 கும்பகோணத்தில் இருந்தவாறு இசை மேதை மதுரை சோமு, சிதம்பரம் ஜெயராமன் பிள்ளை, டி.ஆர். மகாலிங்கம், திருச்சி லோகநாதன், கே.வி.நாராயணசாமி போன்ற முன்னணி இசைக் கலைஞர்களிடம் பக்கவாத்தியக் கலைஞனாகப் பணியாற்றினேன்.

 தனியாக "சோலோ' வயலின் இசைக் கச்சேரிகளும் நடத்தியுள்ளேன். அப்போதெல்லாம் வலங்கைமான் தவில் மேதை சண்முகசுந்தரம் பிள்ளை, திருச்சேறை முத்துகுமாரசாமி பிள்ளை, டி.ஏ. கலியமூர்த்தி ஆகியோர் எனக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் பாக்கியம் பெற்றேன்.

 தலச்சங்காடு சுப்பிரமணியசுவாமி கோயிலில் எனது முதல் கச்சேரியை "சோலோ'வாக வாசித்தபோது "சுகநாத வித்வமணி' பட்டம் பெற்றேன்.

 1982-ம் ஆண்டில் தில்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் எனக்கு நிலைய வித்வானாக வேலை கிடைத்தது. தில்லி வானொலி நிலையம் நடத்திய தேசிய நிகழ்ச்சி, சங்கீத சம்மேளன நிகழ்ச்சி ஆகியவற்றில் பக்கவாத்திய இசைக் கலைஞராக 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். 4 ஆண்டுகளுக்கு முன்புதான் ஓய்வுபெற்றேன். ஆனாலும், வயலின் வாசிப்புக்கு ஓய்வில்லை; இசைப் பணி தொடர்கிறது.1984-ம் ஆண்டின்போது தில்லி தமிழ்ச் சங்கத்தில் இசை வகுப்பு ஏதும் நடைபெறாத சமயம். அப்போது, சங்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி எனது ஊர்க்காரர் என்பதால், வயலின் இசை வகுப்பு எடுக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, இசை வகுப்புகளை அச்சங்கத்தில் ஆரம்பித்தேன். தொடக்கத்தில் இசை வகுப்புக்கு 2 பேர் மட்டுமே வந்தனர். அதன்பிறகு எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. தென்னிந்தியர் மட்டுமன்றி வட இந்தியரும் வயலின் கற்க ஆர்வமுடன் வந்தனர். அச்சங்கத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வயலின் வகுப்பு எடுத்து வருகிறேன். இப்போது, வயலின் பயிற்சி வகுப்பு மட்டுமன்றி பரதநாட்டியம், குச்சுப்புடி போன்ற கலைகளுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

 இசை வகுப்புகள் நடைபெற தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்த கிருஷ்ணமணி, ஆர்.முகுந்தன் ஆகியோர் ஆதரவு அளித்தனர். இப்போது நிர்வாகிகளாக உள்ளஎஸ்.கிருஷ்ணமூர்த்தி, சக்திபெருமாள் ஆகியோரும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருகின்றனர். எனது வகுப்புகளில் பயின்ற மாணவர்களில் 15 பேரின் அரங்கேற்றத்தை நடத்தியுள்ளேன்.

 மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனின் மிருதங்க கச்சேரிக்கும், தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் கச்சேரிக்கும், ஹரிசங்கரின் கஞ்சிரா கச்சேரிக்கும், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கரின் நிகழ்ச்சிக்கும் பக்கவாத்தியமாக வயலின் வாசித்தது மறக்கமுடியாத அனுபவம்.

 இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் இங்கிலாந்து, இத்தாலி, ரஷியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற ஏராளமான வெளிநாடுகளுக்கும் இசை நிகழ்ச்சிக்காக சென்றுள்ளேன்.

 எனது இசைச் சேவையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் 1998-ம் ஆண்டில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வான் பட்டம் 2008-ம் ஆண்டிலும், வயலின் வித்வான் ராஜமாணிக்கம் விருது 2003-ம் ஆண்டிலும், வயலின் செல்வம் பட்டம் கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2001-ம் ஆண்டிலும் பெற்றேன். கடந்த ஆண்டு கலைஞர் விருது கிடைத்தது.

 இதுதவிர, பல விருதுகளும் பெற்றுள்ளேன்.வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிக்கு வருவோர் நிகழ்ச்சி முடியும் வரை இருக்கையில் அமர்ந்திருந்து, நிகழ்ச்சி முடிந்தவுடன் சங்கீத்தின் ராகம், தாளம் குறித்தும் கலைஞர்களிடம் ஆர்வமாக கேட்டறிகின்றனர்.

 அதுபோன்ற நிலை இங்கு இல்லை என்பது வருத்தமான விஷயம்.குடியரசு முன்னாள் தலைவர்கள் ஆர்.வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா, ஜெயில்சிங், கே.ஆர்.நாராயணன் ஆகியோர் முன்னிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இசைக் கச்சேரிகள் பலவற்றில் பங்கேற்றுள்ளேன்.அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக பதவியேற்றிருந்த காலத்தில் எனது மாணவர்கள் அவர் முன்னிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் வயலின் இசைக் கச்சேரியை நடத்தினர். அதற்காக அவர் என்னைப் பாராட்டினார்.எனது மனைவி கமலாவின் குடும்பமும் இசைப் பாரம்பரியம் கொண்டது. எனது மகள் மகாலட்சுமி வாய்ப்பாட்டுக் கலைஞர். தில்லி பல்கலையில் இசையில் முனைவர் பட்டப் படிப்பை மேற்கொண்டுள்ளார். மற்றொரு மகள் சி.முத்துலட்சுமி வயலின் இசைக் கலைஞராக உள்ளார். எனது சகோதரர் வி.எஸ்.கே. அண்ணாதுரை, தில்லி பல்கலை.யில் வயலின் வித்வானாக உள்ளார்.

 சங்கீதக் கச்சேரிகளில் வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் பாடுவதற்கு ஏற்ப வயலின் மீட்டுவதற்கு அனுபவமும், சுய ஞானமும் அவசியம். பாடகரின் ராகத்தைக் கிரகித்து அதற்கேற்ப வயலினில் நாதம் எழுப்ப வேண்டும். அதற்கான உரிய பயிற்சி பெற்றால்தான் விரல்கள் நாதம் மீட்டும்.வயலின் இசையில் எனது 50 ஆண்டுகால அனுபவத்தை என்னிடம் பயிலும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன்.

 பணம் பெறுவதை முக்கியமாக கருதி கலையை நான் சொல்லிக் கொடுப்பதில்லை. ஏனெனில், தொன்மைமிக்க இந்த இசை அடுத்துவரும் தலைமுறைகளுக்கும் சென்றடைய வேண்டும் அல்லவா, அதற்காகத்தான்'' என்று முக மலர்ச்சியுடன் கூறுகிறார் சக்கரபாணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.