திரிலோக்புரியில் "சுளுக்கு தாத்தா'
இப்போதெல்லாம் ஐம்பது வயதைத் தாண்டிவிட்டாலே வாழ்க்கையைப் பற்றிய பயமும், கவலையும் பலருக்குத் தொற்றிக் கொண்டு விடுகிறது. நவீன அறிவியல் மருத்துவ முன்னேற்றம் தீராத நோய்க்கும் மருத்துவ வசதியை அளிக்கும் மகத்
இப்போதெல்லாம் ஐம்பது வயதைத் தாண்டிவிட்டாலே வாழ்க்கையைப் பற்றிய பயமும், கவலையும் பலருக்குத் தொற்றிக் கொண்டு விடுகிறது.
நவீன அறிவியல் மருத்துவ முன்னேற்றம் தீராத நோய்க்கும் மருத்துவ வசதியை
அளிக்கும் மகத்துவம் ஒருபுறம் இருந்தாலும்கூட துரித, நாகரிக உணவுப் பழக்க, வழக்க முறைகளால், வாழ்க்கை முறை மாற்றத்தால் பலவித நோய்களை மனித சமூகம் எதிர்கொண்டு வருகிறது.
சரிவிகித உணவு, சத்தான உணவு, சரியான உணவுப் பழக்கம் ஆகியவற்றில் கவனமாக இருப்போர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். சரி விஷயத்துக்கு வருவோம்.
தடி பிடித்து நடக்க வேண்டிய தள்ளாத வயதில் ஒருவர் அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக "சுளுக்கு' எடுக்கச் செல்வது பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? அவர்தான் திரிலோக்புரியைச் சேர்ந்த தங்கராஜு (90).
இப்பகுதியின் 22-ம் பிளாக்கில் வசிக்கும் இவரை தங்கராஜு என்றால் அப்பகுதி மக்கள் "யார்?' என்று கேட்பார்கள். ஆனால், "சுளுக்குத் தாத்தா' என்றாலோ பிரபலம்.
சிறு பிள்ளைகள்கூட அவரைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நீண்ட தாடி, தலையில் வெள்ளை நிறத் துண்டால் சுருட்டிக் கட்டிய பாகை, தொள தொள சட்டை, வெள்ளை வேஷ்டி என்று கிராமியத் தமிழராகக் காணப்பட்டாலும், தாடியைப் பார்த்தால் இஸ்லாமியர் என்றோ, தலைப்பாகையைப் பார்த்தால் சீக்கியர் என்றோ யோசிக்கத் தூண்டும் தோற்றம்.
தனது வாழ்க்கையைப் பற்றியோ, உடலைப் பற்றியோ கவலை ஏதுமின்றி மந்திரிப்பது, நாட்டு வைத்தியம் பார்ப்பது, சுளுக்கு எடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுவருகிறார் இவர்.
கண் கண்ணாடி அணியாமல் டீக்கடையில் தினசரியைப் புரட்டிக் கொண்டிருந்த அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
""விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சங்கரலிங்கபுரம்தான் என் பூர்வீகம். 5-ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது காங்கிரஸிலும், சுதந்திரப் போராட்டத்திலும் ஆர்வம் காட்டினேன். மறைந்த காமராஜர் 1936-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலம். சுதந்திரப் போராட்டம் கனன்று கொண்டிருந்த சமயம் அது.
வெள்ளைக்கார போலீஸôர் அவரைத் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது, போலீஸôருக்குத் தெரியாமல் இருக்க அவருக்குச் சாப்பாடு கொடுக்க சிறுவனாக இருந்த என்னைத்தான் அனுப்பினர்.
காமராஜரின் உண்மையான பெயர் காமாட்சி. தேர்தலில் போட்டியிடுவதற்காக அவரது பெயரை காமராஜ் என்று மாற்ற வேண்டிய சூழல். அதற்காக அவரிடம் கையெழுத்துப் பெற்று வந்தேன். தன் பெற்றோர் வைத்த பெயரை மாற்றுவதற்கு பலமுறை யோசித்தார் அவர். அதன் பிறகு, காலம் கடந்தது. காமராஜர் தமிழக முதல்வராக இருந்தார். காரைக்குடியில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. 1965-ம் ஆண்டு இருக்குமென்று நினைக்கிறேன். அப்போது, அவரிடம் உதவி கேட்டுச் சென்றபோது "ஆகட்டும் பார்க்கலாம்' என்று கூறிவிட்டார். அதில் எனக்கு மன வருத்தம் உண்டு.
அதன் பிறகு, ராஜாஜியின் சுதந்திரா கட்சியிலும், பின்னர் அண்ணா ஆரம்பித்த தி.மு.க.விலும் சேர்ந்தேன்.
1971-ம் ஆண்டில் தில்லி வந்தேன். சிறிது காலம் ரயில்வேயில் பணியாற்றினேன். 1976-ம் ஆண்டில் திரிலோக்புரிக்கு வந்தோம். இங்குள்ள ஸ்ரீ சௌடம்மன் கோயிலில் பூசாரியாக 15 ஆண்டுகள் பணியாற்றினேன்.
காமராஜரிடம் அவரது பெயர் மாற்றத்திற்காகக் கையெழுத்து வாங்கி வந்துகொண்டிருந்தபோது போலீஸ்காரர் ஒருவர் எனது காலில் அடித்ததில் "சுளுக்கு' விழுந்தது. அதைச் சரி செய்தவர் வேலப்பர் என்பவர். அவரிடம் கற்றுக் கொண்டதுதான் இந்த சுளுக்கு வைத்தியம்.
நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உதவ வேண்டும் என்பதே என் எண்ணம். ""உன்னிடம் இருப்பதை வைத்து தேன் போல் சுவை. அதீத ஆசைப்படாதே'' இதுதான் என் கொள்கை. இப்போதைய தலைமுறையினர் உணவு முறைகளில்கூட நாகரிகப் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர். எங்கள் காலத்தில் அரிசிச் சோற்றை விட கம்பு, கேழ்வரகு, சோளம் இது போன்ற தானியங்களை அதிகம் உணவில் சேர்த்தோம். அதனால்தான் இன்றைக்குகூட நான் தெம்பாக இருக்கிறேன்.
இப்போதைய உணவு முறைகளும் சரியில்லை; உணவும் சரியில்லை. ரசாயன உரங்களால் எல்லாம் விஷமாகி வருகிறது. அடுத்து வரும் தலைமுறையினர் வசதியாக வாழ்வார்கள். ஆனால், ஆரோக்கியமாக வாழ்வார்களா என்பதுதான் என்னைப் போன்றவர்களுக்கு கவலை'' என்று சமூக அக்கறையுடன் கூறுகிறார் இந்த சுளுக்குத் தாத்தா.