குழந்தைகளிடம் பண்பாட்டை வளர்க்க பள்ளிகளில் நீதிபோதனை அவசியம்
புது தில்லி, செப்.14: குழந்தைகளிடம் பண்பாடு, கலாசாரத்தை வளர்ப்பதற்குப் பள்ளிகளில் நீதிபோதனை அவசியம் என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார். புது தில்லிக்கு வருகை
புது தில்லி, செப்.14: குழந்தைகளிடம் பண்பாடு, கலாசாரத்தை வளர்ப்பதற்குப் பள்ளிகளில் நீதிபோதனை அவசியம் என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
புது தில்லிக்கு வருகை தந்துள்ள அவர், ராமகிருஷ்ணாபுரம் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் எதிரே உள்ள அருள்மிகு தேவி காமாட்சி அம்மன் கோயிலில் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.
"தினமணி' நிருபரிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:
இளைய தலைமுறையினரிடம் தேசத்தின் பண்பாடு, கலாசாரம், கலைகள் தொடர்பான விஷயங்களைப் பயிற்றுவிப்பதைப் பெரியவர்கள் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.
பண்பாட்டைப் பேணும் சமுதாயமுமே சிறந்த சமுதாயமாக இருக்க முடியும். குழந்தைகளிடம் தேசத்தின் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை எடுத்துக் கூற வேண்டும்.
நாங்கள் சிறு வயதில் இருந்தபோது பள்ளிகளில் நன்னெறி கற்றுத் தரப்பட்டது. அதுபோன்ற விஷயங்கள்தான் இன்றைய தலைமுறையினரை சிறந்தவர்களாக உருவாக்க உதவிடும்.
காஞ்சிமடம் சார்பில் அறநெறிக் கதைகள், கருத்துகள் அடங்கிய நூல்கள் ஆங்கிலம், தமிழில் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
காஞ்சி மடத்தைத் தொடர்புகொண்டால் பள்ளிகளுக்கு அவற்றை இலவசமாக வழங்கத் தயாராக இருக்கிறோம்.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பள்ளிகளில் கீதை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதுபோன்ற அளவுக்கு இல்லாவிட்டாலும் நீதிபோதனையை பள்ளிகளில் அவசியம் பயிற்றுவிக்க வேண்டும். அவைதான் குழந்தைகளைப் பண்பட்டவர்களாக மாற்றும்.
மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கும் வகுப்புக் கலவரத் தடுப்புச் சட்ட முன்வடிவு நாட்டுக்கு ஆபத்தானது.
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தபோது பெரும்பான்மை, சிறுபான்மை என்று பார்க்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது அது போன்ற நிலை இல்லை. எல்லோரையும் சமத்துவமாகவே பார்க்க வேண்டும். நம்முடைய சமுதாயத்தில் பெரும்பான்மையோரில் ஏழைகள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கச் செய்வது அவசியம் என்றார் அவர்.