இளம் குயில்களின் "வர்ணம்'
கர்நாடக சங்கீத வானில் பலர் சூரிய சந்திரர்களாகவும், நட்சத்திரங்களாவும் ஜொலித்துள்ளனர். தற்போது பலர் பிரகாசித்தும் வருகின்றனர். அவர்கள் அடிப்படையில் இசையில் தேர்வதற்கு "வர்ணம்' முக்கிய அங்கமாக இருக்குமெ
கர்நாடக சங்கீத வானில் பலர் சூரிய சந்திரர்களாகவும், நட்சத்திரங்களாவும் ஜொலித்துள்ளனர். தற்போது பலர் பிரகாசித்தும் வருகின்றனர். அவர்கள் அடிப்படையில் இசையில் தேர்வதற்கு "வர்ணம்' முக்கிய அங்கமாக இருக்குமென்றால், அது நிஜம்!
கர்நாடக சங்கீதம் பயிலுவோர் இசை ராகங்களின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும் வகையில் ஆரம்ப நிலையில் இந்த "வர்ணம்' பயிற்றுவிக்கப்படுகிறது.
தலைநகரான தில்லியில் இளம் வாய்ப்பாட்டு இசைக் கலைஞர்களிடம் "வர்ணம்' வாய்ப்பாட்டின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் "வர்ணம்' வாய்ப்பாட்டுப் போட்டிகளை கடந்த இரு ஆண்டுகளாக நடத்தி வருகிறது ராமகிருஷ்ணபுரம் சௌத் இந்தியன் சொûஸட்டி.
இந்த ஆண்டுக்கான இப்போட்டி லோதி ரோடு ரமண கேந்திர அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற இப்போட்டியில் இளம் குயில்களின் இனிய சங்கீதம் ஏகாந்தமாக இருந்தது. தொடக்கமாக, வாய்ப்பாட்டுக் கலைஞர் ஜோதி ஸ்ரீதேவி இறைவணக்கப் பாடல் பாடினார். அதைத் தொடர்ந்து போட்டியானது ஜூனியர், சீனியர் என இரு பிரிவுகளாக நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற போட்டியில் 15 வயதுக்குள்பட்ட இளம் இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். பிற்பகலில் சீனியர் பிரிவுக்கான போட்டியில் 15 வயதுக்கு மேற்பட்ட 11 மாணவ, மாணவியர் தில்லியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து பங்கேற்றனர்.
பாரம்பரிய தென்னிந்திய உடையில் வந்து மேடையில் அமர்ந்து தங்களது இசைத் திறமையை "வர்ணம்' பாடி இளம் கலைஞர்கள் வெளிப்படுத்தினர்.
சங்கராபரணம், கானடா, ஸ்ரீ, பைரவி, கல்யாணி, வசந்தா என பல்வேறு ராகங்களில் அமைந்த வர்ணங்களைப் அவர்கள் பாடினர். இடையிடையே நடுவர்கள் கேட்கும் இசை தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்தனர். நடுவர்கள் கேட்ட ராகத்தில் பாடல்களைப் பாடினர்.
போட்டியின் நடுவர்களாக வாய்ப்பாட்டுக் கலைஞர் வசந்தா சுந்தரம், டாக்டர் வசந்தி கிருஷ்ணாராவ், ஜோதி ஸ்ரீதேவி, மிருதங்க வித்வான் ஜெயந்த் தாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் இசைக் கலைஞர் வசந்தா சுந்தரம் பேசுகையில்: ""சங்கீதத்தின் முதுகெலும்பாக வர்ணம் பாட்டுகள் உள்ளன. பாடல்கள் பாடும்போது ஜதி, நடைகள் மாற்றியும், ஸ்வரம் கோர்வையாகவும், அழகாகவும் வர வேண்டும். சாஹித்தியங்களும், ஸ்வரங்களும் சேதமாகக் கூடாது. அதற்கு வர்ணம் பயிற்சி செய்வது அவசியம்.
பாடல்களில் தேவையான இடங்களில் குரல் அழுத்தம் அவசியமாகிறது. விறுவிறுப்பும் இருக்க வேண்டும். இதெல்லாம் வர்ணம் பயிற்சி செய்வதன் மூலம் கிடைக்கும். வர்ணத்தில் அகாரம், உகாரம் அதிகம் இருப்பதால் குரலில் மெருகேறும். வர்ணத்தைப் பயிற்சி செய்வதுடன் நின்றுவிடாமல் குரு கூறும் அறிவுரையுடன் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
இதுபோன்று வர்ணம் போட்டிகளை நடத்தி இளம் தலைமுறையினரை சிறந்த இசைக் கலைஞர்களாக உருவாக்க வேண்டும் என்கிற ராமகிருஷ்ணபுரம் சௌத் இந்தியன் சொûஸட்டியின் முயற்சி பாராட்டுக்குரியது'' என்றார்..
இசைக் கலைஞர் வசந்தி கிருஷ்ணாராவ் பேசுகையில், ""சங்கீதத்தைப் பயில்வது போட்டியில் பங்கேற்பதற்காக என்றில்லாமல் நமது கலாசாரத்தின் தொன்மையைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கமாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சீனியர் பிரிவில் அதிக மாணவர்கள் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது'' என்றார்.
""தாளக் கலை மிகவும் நுட்பமானது. ஸப்த ஸ்வரங்கள் போன்று ஸப்த தாளங்களும் இசைக்கு அவசியமாகிறது. துருவ தாளம், மட்டிய தாளம், ரூபக தாளம், ஏக தாளம், ஜம்பை தாளம், திரிபுடை தாளம், அட தாளம் ஆகியவையே அவை. இந்த 7 தாளங்களில் மூன்று அங்கங்கள் காணப்படுகின்றன. அவை லகு, துருதம், அனுருதம். இசை பயிலும் மாணவர்கள் ஸப்த தாளங்களையும் முழுமையாகக் கற்றுத் தேர்வது அவசியம். இசையை உணர்ந்து பாடலையும் இனிமையான குரலில் பாட இது உதவும்'' என்று மிருதங்க வித்வான் ஜெயந்த் தாஸ் பேசினார்.
ராமகிருஷ்ணபுரம் சௌத் இந்தியன் சொûஸட்டி செயலர் எஸ். கிருஷ்ணசாமி பேசுகையில், தலைநகரில் கர்நாடக சங்கீதத்தைப் பயின்றுவரும் இளம் தலைமுறையினரிடம் அந்த இசையின் முக்கிய அங்கங்களில் ஒன்றாகத் திகழும் வர்ணத்தின் மகத்துவத்தை அறிந்து கொள்ளச் செய்யும் வகையில் இந்த போட்டியைக் கடந்த ஆண்டு முதல் நடத்தி வருகிறோம் என்றார்.
போட்டியில் பங்கேற்ற ஜனக்புரியைச் சேர்ந்த விஷ்ணுப்ரியா (13) என்ற மாணவியின் தாயார் உமா ஜெயராமன் கூறுகையில், கடந்த ஆண்டு என் மகள் இந்தப் போட்டியில் பங்கேற்றாள். போட்டியில் பங்கேற்றதன் மூலம் "வர்ணம்' பற்றிய அவசியத்தையும், அது தொடர்பான நுணுக்கங்களையும் தெரிந்துகொள்ள முடிந்தது என்றார்.
படங்கள்: கே.டி. ராமகிருஷ்ணன்