முகப்பு
புதுதில்லி

நவீன கதை பாணி நோக்கி பரதக் கலை!

அந்திப் பொழுதின் இதமான குளிரில் அந்த அரங்கின் இருள் சூழ்ந்த மேடையில் நடுவில் ஓர் வெளிச்சச் கீற்று. அதில் அற்புத அடவுகளை உடல் அசைவின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் அப்பெண் நடனக் கலைஞர். பரத நா

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:04 PM
பகிர்:

அந்திப் பொழுதின் இதமான குளிரில் அந்த அரங்கின் இருள் சூழ்ந்த மேடையில் நடுவில் ஓர் வெளிச்சச் கீற்று. அதில் அற்புத அடவுகளை உடல் அசைவின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் அப்பெண் நடனக் கலைஞர்.

பரத நாட்டியமாக அது இருந்தாலும் பழங்காலப் புராணக் கதையையும், ஆன்மிகத்தையும் மையப்படுத்தாத கதைக்களம். குழந்தையிடம் அன்பை வெளிப்படுத்தும்  காட்சி அது.  வெளிநாட்டினரும், வடநாட்டினரும் அந்த நாட்டியத்தை மிகவும் ரசிப்பதை அவர்களது கைதட்டல் ஓலி கட்டியம் கூறுவதாக இருந்தது.  

புதுமையான கதைக் கருவைக் கொண்டு அமைக்கப்பட்ட அந்த பரத நாட்டியத்தை நடத்தியவர் தில்லியைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர் சவிதா சாஸ்திரி. பரதக் கலையைப் புதிய கதைக் களத்தின் மூலம் பல தரப்பினரிடமும் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார் இவர்.

   ஆன்மிகக் கதைகளில் இருந்து வேறு கதைத் தளத்திற்கு இக்கலையை எடுத்துச் செல்லும்போது இதற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது? சவிதா சாஸ்திரி கூறுகிறார்:

    ""1800-ம் ஆண்டுகளின்போது தஞ்சாவூரைச் சேர்ந்த சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகிய நான்கு சகோதரர்கள் பரதக் கலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தனர். அக்காலத்திற்கு ஏற்ப அவர்களுக்கு தோன்றிய கருத்தின்படி இக்கலைப் பாணியை வகுத்தனரே தவிர, இப்படித்தான் இக்கலை இருக்க வேண்டும் என்று அவர்கள் ஏதும் சொல்லவில்லை.

கோயில்களில் சதிராட்டமாகத்தான் இக்கலை முன்னர் இருந்தது. ஒரு காலக்கட்டத்தில் இக்கலை மதிப்பிழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டது. அப்போது, இக்கலைக்குப் புத்துயிர் ஊட்டி புதுமையை ஏற்படுத்தியவர் ருக்மணி அருண்டேல்.

1930-ம் ஆண்டுகளில் இக்கலையில் புதுமையைப் புகுத்தி உயர் வகுப்பு பெண்மணிகள் மேடைகளில் ஆடும் கலையாக மாற்றுவதற்கு முயற்சி எடுத்தார். அதனால், இக்கலைக்கு மதிப்பும் அதிகரித்தது. ஊக்கமும் ஏற்பட்டது.

ஒரே கதையையே திரும்பத் திரும்பச் சொல்வதைத் தவிர்த்து, பரதநாட்டியத்தின் அடிப்படை அழகியல், வழிமுறைகளை மாற்றாமல் கதையை மட்டும் மாற்றம் செய்தால், அதைச் சொல்லும் விதத்தை மாற்றம் செய்தால் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வழியேற்படும்.

இக்கலையின் அழகியல், கலாசார ஒருமைப்பாடு மாறாமல் அனைத்துத் தரப்பு மக்களிடமும் இதன் மகத்துவம் சென்றடைய வேண்டும். அதற்கு இதுபோன்ற புதுமையான கதைகளும் தேவைப்படுகின்றன. தற்போது என்னுடைய இரண்டாவது கதையின் தலைப்பு "சோல் கேஜஸ்' என்பதாகும். இந்த நாட்டியக் கதை சிறுமியை மையப்படுத்தியது. கதையின்படி சிறுமி திடீரென இறந்துவிடுகிறாள்.

அவள் சொர்க்கத்திற்குச் செல்கிறாள். இந்த பூமிக்கு ஒரு தந்தை இருப்பதுபோன்று, சொர்க்கத்திலும் ஒரு அரசர் இருக்கிறார். அவரை மரண அரசன் என்கிறார்கள். அவரைப் பார்த்து எல்லோரும் பயப்படுவர். அவரை நான் "எமன்' என்ற அர்த்தத்தில் கதையில் சொல்லவில்லை.

அச்சிறுமிக்கு சொர்க்கம் பிடித்துப் போய்விடுகிறது. பூமிக்குச் சென்றுவிட்டுதான் மீண்டும் அங்கே வரலாமா என்று மரண அரசனிடம் கேட்கிறாள். அவருக்கோ ஆச்சரியம். "இல்லை நீ இங்கேதான் இருக்க வேண்டும்' என்று பதிலுரைக்கிறார். அந்த உலகத்தை அவள் ஒரு கூண்டு போலவே நினைக்கிறாள். இதை நாட்டியத்தின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.  இக்கதையை எனது கணவர் ஸ்ரீகாந்த் வடிவமைத்துள்ளார்.

இந்த நாட்டிய நிகழ்ச்சியை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, பிரிட்டன், மஸ்கட், துபை உள்ளிட்ட பல நாடுகளில் நடத்தியுள்ளேன். இக்கலையை வளர்ப்பதற்கு நான் வித்தியாசமான கதை அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்துள்ளேன். அவ்வளவுதான்.

இக்கலையை ஏற்கெனவே ரசித்து வருபவர்கள் மட்டுமின்றி மற்றவர்களையும் ரசிக்கவும், புரியவும் செய்யவேண்டும். அதற்கு இதுபோன்ற கதை மாற்றங்கள் அவசியம்.  

சென்னை மந்தைவெளிதான் எனது ஊர். ஆறு வயதிலேயே இக்கலையைக் கற்கத் தொடங்கினேன். பரதக் கலைஞர் மகாலிங்கம் பிள்ளை, பத்மபூஷண் தனஞ்சயன், பத்மஸ்ரீ அடையாறு லட்சுமணன் ஆகியோரிடம் இக்கலையைப் பயின்றேன். சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் விலங்கியல் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்குச் சென்றேன். பின்னர், அங்கேயே 20 ஆண்டுகள் தங்கியிருந்து பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தேன்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தில்லியில் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். "சாய்ஸ்ரீ ஆர்ட்ஸ்' பரதக் கலை மையத்தையும் நடத்தி வருகிறேன். கலிபோர்னியாவில் இதன் கிளையும் உள்ளது. பரதம் ஒரு அழகான கலை வடிவம். இதை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வதற்கு எத்தகைய கதைகளைப் புனையலாம் என்று யோசித்து வருகிறோம் என்றார் சவிதா சாஸ்திரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.