வாழ்வதற்கு அர்த்தம், வாழ்ந்ததற்கு அடையாளம்
மானுடத்தின் வளர்ச்சிக்கும், வசதியான வாழ்க்கைக்கும் அறிவியல் உலகம் அளித்த வரங்கள் ஏராளம். என்றாலும்கூட, மனித நேயம், காருண்யம், பொதுநலம் பேணுதல் போன்ற குணநலன்கள் எல்லாம் மனிதர்களிடம் அருகி வருகிறது கவலை
மானுடத்தின் வளர்ச்சிக்கும், வசதியான வாழ்க்கைக்கும் அறிவியல் உலகம் அளித்த வரங்கள் ஏராளம். என்றாலும்கூட, மனித நேயம், காருண்யம், பொதுநலம் பேணுதல் போன்ற குணநலன்கள் எல்லாம் மனிதர்களிடம் அருகி வருகிறது கவலை தரும் விஷயம். மனிதன் தன்நிலையில் இருந்து சற்றுத் தாழ்ந்தாலும் சக மனிதனே ஒதுக்கும் போக்கு மனித சமூகத்தில் மட்டும்தான் பார்க்க முடியும்!
சாலையோரங்களிலும், தெருக்களிலும், கோயில் பகுதிகளிலும் மனநிலை பாதித்த, முதுமை சுமந்த மனிதர்கள் பலர் நிர்கதியாக காணப்படுவதே இதற்குச் சான்று. இருப்பினும், கருணை உள்ளங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன பி. மணிமாறன், லோகநாதன் சகோதரர்கள் போல.
திரையரங்கம், பார்க், கிளப், பப் போன்ற நவீன வாழ்க்கை விஷயங்களில் பொழுதைக் கழிக்காமல், சாலையோரங்களில் சுற்றித் திரியும் மனநிலை பாதித்தவர்கள், தொழுநோயாளிகளைக் கண்டறிந்து உதவும் அரிய பணியில் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர்.
சேவை செய்வதற்குப் பிறரை எதிர்பாராமல் தங்கள் உழைப்பில் கிடைக்கும் வருவாயைச் செலவிடவும் செய்கின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த இவர்கள் அண்மைக் காலமாக தில்லியின் முக்கியப் பகுதிச் சாலைகளில் மனநிலை பாதித்தவர்களுக்கு உடைகள், உணவு வழங்கிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் தொடங்கி நடத்தும் சமூக சேவை அமைப்புக்குப் பெயர்: உலக மக்கள்சேவை மையம். அதனால்தானோ என்னவோ, மாநில எல்லையைக் கடந்து சேவைக் கரங்களை நீட்டியுள்ளனர் இவர்கள்!
உள்ளூரிலேயே சேவை செய்வதற்கு ஓராயிரம் முறை யோசிக்கும் மனிதர்கள் வாழும் இந்நாட்டில், மாநிலம் விட்டு மாநிலம் வந்து மானிட சேவையா?
மணிமாறனே விளக்குகிறார்: ""எங்கள் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், தலையாம்பள்ளம். அப்பா விவசாயி. சிறு வயதில் இருந்தே பிறருக்கு உதவது எனக்குப் பிடித்த விஷயம். நான் 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. எல்லோரும் என்னை ஏளனம் செய்தனர். என் தந்தை மட்டும் ஊக்குவித்தார். "உனக்கு எது பிடிக்கிறதோ அதில் முழு ஈடுபாடு காட்டு. செயல்கள் முக்கியமல்ல; சாதனைதான் முக்கியம்' என்று அறிவுரை கூறினார்.
தொடக்கத்தில் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்தேன். அதில் கிடைக்கும் ஊதியத்தைத் தருவதற்காகச் ஊருக்குச் செல்வேன். ஒருமுறை சாலையோரத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டியிடம் பொதுமக்கள் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தேன். அது என்னை வெகுவாகப் பாதித்தது. அந்த மூதாட்டிக்கு உதவினேன். அதில் எனக்கு மன நிம்மதி கிடைத்தது. தொடர்ந்து மனநிலை பாதித்த, கைவிடப்பட்ட முதியோர், தொழுநோயாளிகளுக்கு உதவ எண்ணினேன். பெற்றோரும் அதற்கு அனுமதித்தனர். எனது அண்ணன் லோகநாதனும் என்னுடன் சேவையாற்ற ஆர்வம் காட்டினார்.
தொடக்கத்தில் வாரம் ஒருமுறை திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்குச் சென்றோம். சாலையோரம் இருந்த முதியோர், மனநிலை பாதித்தோருக்கு உணவும், உடைகளும் தந்து உதவினோம். தொழுநோயாளிகளைக் கண்டறிந்தால் அவர்களை காப்பகத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தோம்.
அதையடுத்து, சாலைகளில் பராமரிப்பின்றி அவதியுற்ற 59 தொழுநோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை உதவிகளைச் செய்து கொடுத்து இல்லங்களில் சேர்க்க ஏற்பாடு செய்தோம். இதற்காக, குளோபல் வேர்ல்ஸ் ரெக்கார்ட்ஸ், அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், யூனிக் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் போன்ற அமைப்புகள் பாராட்டிச் சான்றிதழ்கள் வழங்கின.
புதுவை முதல்வர் ஆர். ரங்கசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு போன்ற பலர் என்னைப் பாராட்டி ஊக்குவித்தனர்.
ரத்த தானம், உடல் உறுப்பு தானம் தொடர்பாக கல்லூரி, பள்ளிகளிலும் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம்.
தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல இடங்களிலும் சென்று இது போன்ற ஆதவற்றோர், தொழுநோயாளிகளுக்குத் துணிமணிகள், உணவுகள் வழங்கி வருகிறோம். இதற்காக ஆயத்த ஆடை விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பயன்படுத்தி வருகிறோம்.
நான் முழுநேரப் பணியில் ஈடுபடுவதால் எனது அண்ணன் லோகநாதன் இதற்கான பணத் தேவைக்கு உதவி வருகிறார். வெளிமாநிலங்களுக்குச் செல்வதாக இருந்தால் என்னுடன் வந்து அவரும் சேவையில் ஈடுபடுவார். 450 தன்னார்வத் தொண்டர்கள் எங்கள் அமைப்பில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
விபத்தில் சிக்குவோரையும், நோயாளிகளை மீட்பதற்கும் தமிழகத்தில் "108 ஆம்புலன்ஸ்' சேவை உள்ளது. இது போன்ற சேவையை சாலையோரங்களில் சுற்றித் திரியும் மனநோயாளிகளையும், தொழுநோயாளிகளையும் மீட்க ஏற்பாடு செய்தால் பேருதவியாக இருக்கும்.
தன் வேலைகளைக் கூட செய்ய முடியாத நிலையில் உள்ள தொழுநோயாளிகள், முதியோர்களைப் பராமரிக்க ஒரு இல்லம் அமைக்கத் திட்டமிட்டு வருகிறோம்.
எங்கள் அமைப்பின் சின்னமாக சுவாமி விவேகானந்தர், அன்னை தெரசா, அப்துல் கலாம் ஆகியோரின் படங்களையே வைத்துள்ளோம். இந்தியா வல்லரசாகும் கனவையும், அதற்கு இளைஞர் பங்களிப்பு அவசியத்தையும் வலியுறுத்தி வரும் கலாமை நாங்கள் பின்பற்றி வருகிறோம். வாழ்வதற்கு அர்த்தமும் வேண்டும். வாழ்ந்ததற்கு அடையாளமும் வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் மணிமாறன்.