முகப்பு
புதுதில்லி

"அர்ப்பணிப்பு இருந்தால் எதிலும் சாதிக்கலாம்'

அனைத்த இலக்கை அடைவதற்குக் கடின உழைப்பும், அது பற்றிய தொடர் சிந்தனையும் வேண்டும்' என்பது அனுபவசாலிகளின் கருத்து.  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற மத்திய அரசின் உயர் பணிகளில் சேருவது இன்றைய இளைஞர்கள் பலரது கன

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

அனைத்த இலக்கை அடைவதற்குக் கடின உழைப்பும், அது பற்றிய தொடர் சிந்தனையும் வேண்டும்' என்பது அனுபவசாலிகளின் கருத்து.

 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற மத்திய அரசின் உயர் பணிகளில் சேருவது இன்றைய இளைஞர்கள் பலரது கனவும், லட்சியமுமாக இருக்கிறது.

 எனினும், அதை எட்டாக் கனியாகவே பார்க்கும் மனோநிலை கொண்ட இளைஞர்கள்தான் அதிகம்!

 "எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதில் கருத்தூன்றி, நுணுக்கங்களுடன் திட்டமிட்டுச் செய்தால் எதுவும் கைக்கெட்டும் தூரம்தான்' என்கிறார் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சரின் தனிச் செயலராகப் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரியான கண்ணன் ஜெகதீசன்.

 "குட்டி ஜப்பான்' எனப்படும் தமிழகத்தின் பட்டாசு நகரமான சிவகாசியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது தந்தையின் பெயர் கண்ணன் என்பதை தன் பெயருடன் சேர்ந்தே அழைப்பதைப் பெருமையாகக் கருதும் இவர், அவரது குடும்பத்திலேயே முதல் தலைமுறைப் பட்டதாரி.

 சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி (பட்டய கணக்காய்வாளர்) படித்து விட்டு, பிறகு, சிவில் சர்வீஸ் தேர்வும் எழுதி தேர்ச்சி பெற்று, ஐ.பி.எஸ். அதிகாரியாக 14 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். தமது பல்துறை அனுபவங்களை "தினமணி'யுடன் பகிர்ந்து கொண்டார் கண்ணன் ஜெததீசன்.

 தினமணி: நீங்கள் படித்தது, வளர்ந்தது பற்றிச் சொல்லுங்களேன்...?

 கண்ணன் ஜெகதீசன்: எனது பூர்வீகம் சிவகாசி. ஆஃப்செட் பிரிண்டர்ஸ் நிறுவனத்தில் என் தந்தை கணக்காளராக வேலை செய்தார். அவரது பணியிடம் சென்னையாக இருந்ததால் நான் படித்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை என்றாகிவிட்டது. படித்துக் கொண்டிந்தபோது லட்சியக் கனவு ஏதும் இல்லை. சென்னை மயிலாப்பூரில் விவேகானந்தா கல்லூரியில் 1992-ம் ஆண்டில் பி.காம். முடித்தேன்.

 தினமணி: சார்ட்டர்ட் அக்கவுண்ட்டன்சி படித்த உங்களுக்கு சிவில் சர்வீஸ் படிக்க ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

 கண்ணன் ஜெகதீசன்: பட்டப் படிப்புக்குப் பிறகு தனியார் நிறுவனத்தில் ரூ. 3,000 சம்பளத்தில் அக்கவுண்டன்ட் வேலை கிடைத்தது. அங்கு பணியாற்றிய ஆடிட்டரைப் பார்த்து நானும் அதுபோல் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக வேலையைத் துறந்தேன். அப்போது எனது தந்தை இறந்திருந்த நேரம். எனினும், ஆடிட்டராக வேண்டும் என்ற எனது ஆசைக்கு ஊக்கம் அளித்தார் என் தாயார் ராஜேஸ்வரி.

 ஆடிட்டர் படிப்பு மூன்று ஆண்டுகள். சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் வைத்தியநாதனிடம் பயிற்சி பெற்றேன். ஒருநாள் அவர் என்னிடம், "நீ ஏன் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதக்கூடாது?' என்று கேட்டு ஆர்வமூட்டினார். அவர் மீதிருந்த மதிப்பால் "சரி' என்று பதில் அளித்தேன். அதன்படியே, சில மாதங்கள் சிவில் சர்வீஸ் தேர்வுக்காகப் படித்தேன்.

 1998-ல் முதல் முறையாக இத்தேர்வை எழுதினேன். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றேன்.

 சிவில் சர்வீஸ் பிரதான எழுத்துத் தேர்வும், சி.ஏ. தேர்வும் ஒரே சமயத்தில் வந்துவிட்டது. இதனால் எதற்கு முக்கியத்துவம் தருவது என்ற குழப்பம் ஏற்பட்டது. பிறகு ஒரே முடிவாக சி.ஏ. தேர்வை எழுதினேன். அகில இந்திய அளவில் 39-ம் இடம் பெற்றேன்.

 பிறகு ஹட்கோ நிறுவனத்தில் ரூ. 10,000 சம்பளத்தில் தில்லியில் நிதிப் பயிற்சியாளர் பணி கிடைத்தது. பணியில் சேர்ந்த பிறகு, விட்ட குறை, தொட்ட குறையாக மீண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் எண்ணம் மனத்தில் துளிர்த்தது.

 அத்தேர்வுக்காகச் சில மாதங்கள் விடுப்பு தேவைப்பட்டது. ஆனால், அதற்கு நிறுவனம் அனுமதிக்கவில்லை. அதனால், வேலையை விட்டுவிட்டு சென்னைக்குத் திரும்பினேன். அப்போதும் என் தாயார் என்னை ஊக்குவித்தார்.

 சில மாதங்கள் படிப்புக்குக் பிறகு தேர்வு எழுதினேன். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று, பிரதானத் தேர்வுக்காகத் தமிழ் இலக்கியத்தையும் வணிகவியலையும் தேர்ந்தெடுத்துப் படித்தேன். அதில் வெற்றிபெற்று இந்தியக் காவல் பணியில் (ஐ.பி.எஸ்.) சேர்ந்தேன்.

 தினமணி: ஐ.பி.எஸ். அதிகாரியாக உங்களது பணி...?

 கண்ணன் ஜெகதீசன்: முதலில் அந்தமான் நிகோபர் தீவில் பணியைத் தொடங்கினேன். தொடர்ந்து, புதுச்சேரியிலும் காரைக்காலிலும் முதுநிலை காவல் கண்காணிப்பாளராகப் (எஸ்.எஸ்.பி.) பணியாற்றினேன்.

 2007-ம் ஆண்டில் கிழக்கு தில்லியில் காவல் துறை கூடுதல் துணைக் ஆணையராகப் பொறுப்பேற்றேன். 2008-ம் ஆண்டு இறுதியில் ஐக்கிய நாடுகள் அமைதிப் படையில் அதிகாரியாக தேர்வானேன். அதைத் தொடர்ந்து, கொசோவா நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பணிக்காக அனுப்பப்பட்டேன். அங்கு 14 மாதங்கள் பணியாற்றினேன். பின்னர் 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சரின் தனிச் செயலராகப் பணியாற்றி வருகிறேன்.

 தினமணி: சார்ட்டர்ட் அக்கவுண்ட்டன்சி படிப்புக்கும், சிவில் சர்வீஸ் படிப்புக்கும் இடையே நீங்கள் உணரும் வித்தியாசம் என்ன?

 கண்ணன் ஜெகதீசன்: ஆடிட்டருக்குப் படித்தபோதும் சரி, ஐ.பி.எஸ். படித்த போதும் சரி இதுதான் படிக்க வேண்டும். இதைத்தான் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே பெரிதாகத் திட்டமிடவில்லை.

 தேர்ந்தெடுத்த படிப்பில், முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டேன். அதுதான் வெற்றிக்கு வழி அமைத்துக் கொடுத்ததாகக் கருதுகிறேன்.

 எந்தப் பணியை எடுத்துக்கொள்கிறோம் என்பதை விட, அதை எப்படிச் சிறப்பாகச் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.

 சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியபோது அதீதமாகப் பயிற்சி எடுக்கவில்லை. ஆனால், தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான நுணுக்கங்களுடன் படித்தேன்.

 தினமணி: ஐ.பி.எஸ். தேர்வின் நுணுக்கமாக நீங்கள் கருதுவது எது?

 கண்ணன் ஜெகதீசன்: தேர்வுக்கு ஓராண்டாகப் படித்தாலும் தேர்வு எழுதப் போவது என்னவோ மூன்று மணிநேரம்தான். அந்தத் தேர்வுத்தாளைத் திருத்துபவர் எடுத்துக்கொள்ளும் நேரம் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கலாம்.

 விடைத்தாளைத் திருத்துவோருக்குத் தொடக்கத்திலேயே நம்மைப் பற்றிய மதிப்பு ஏற்பட்டு விடுவது இயல்பு. ஆக, தேர்வை எதிர்கொள்ளத் தேவையான முனைப்பும், நுணுக்கமும் அவசியம்.

 நான் தேர்வு எழுதும்போது முந்தைய தேர்வுகளின் வினாத்தாள் தொகுப்பை சேகரித்துப் படித்து, நானே சுயமாகத் தேர்வைப் பலமுறை எழுதிப் பழகினேன். இது சற்றுச் சலிப்பூட்டுவதாக இருந்தாலும் அதன் மூலம்தான் என்னை எளிதாகச் சுய மதிப்பீடு செய்துகொள்ள முடிந்தது. பயற்சி நிலையங்களுக்குச் சென்று படிப்பதன் மூலமும் நமக்கு வேறு சில அனுபவங்கள் கிடைக்கக் கூடும்.

 தினமணி: உங்கள் குடும்பத்தில் நீங்கள் மட்டும்தான் உயர் பதவியில் இருக்கிறீர்களா?

 கண்ணன் ஜெகதீசன்: எனது இளைய சகோதரர் கே. மாணிக்கராஜு 2005-ம் ஆண்டில் ஆந்திரப் பிரிவில் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். தற்போது அவர் ஸ்ரீநகரில் பணியாற்றுகிறார். அவரது மனைவி யோகிதாவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான்.

 தினமணி: சிவகாசியில் நூலகம் ஏற்படுத்தியிருக்கிறீர்களாமே...?

 கண்ணன் ஜெகதீசன்: சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சிவகாசியில் எனது நண்பர் உதவியுடன் ஒரு நூலகத்தை நடத்தி வருகிறேன்.

 நம்மால் முடிந்த அளவுக்கு, சிலராவது உயர் பதவிக்கு வர உதவ வேண்டும் என்ற ஆசையில் அதை நடத்தி வருகிறேன்.

 தினமணி: வெற்றிக்கு அடிப்படைத் தேவையாக நீங்கள் கருதுவது எது?

 கண்ணன் ஜெகதீசன்: வாழ்க்கையில் லட்சியம் வேண்டும். எந்த லட்சியமும் இல்லாவிட்டாலும், எந்தச் செயலை மேற்கொள்கிறோமோ அதில் ஆர்வத்துடன், இலக்கு வைத்துச் செயல்பட்டால் வெற்றியடையலாம்.

 "நதியோடை போல, வாழ்க்கையின் பயணமும் ஏதாவது ஒரு திசை நோக்கிச் செல்லலாம். ஆனால், இலக்கை அடைவது அவரவரின் முயற்சியில்தான் உள்ளது' என்று நம்பிக்கை வார்த்தைகளுடன் முடித்தார் கண்ணன்

ஜெகதீசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.