முகப்பு
புதுதில்லி

சிங்களர்களைப் பாதுகாக்க வேண்டும்: பிரதமருக்கு ஒடிசா பாஜக எம்.பி. கடிதம்நமது சிறப்பு நிருபர்

"இலங்கையில் சிங்களர்களின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒடிசா மாநிலம், புவனேசுவரம் மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் பிரசன்ன குமார் படாசனி கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 13 மே 2013, 12:50 am IST
பகிர்:

"இலங்கையில் சிங்களர்களின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒடிசா மாநிலம், புவனேசுவரம் மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் பிரசன்ன குமார் படாசனி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த வாரம் எழுதியுள்ள அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: இலங்கைக்கும், இந்தியாவுக்கும் உள்ள தொடர்பை வரலாற்று ஆய்வாளர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

புத்தர் ஞானதோயம் பெற்ற போதி மரக்கன்றை கலிங்க அரசர் அசோகர் தனது மகன், மகள் மூலம் இலங்கைக்குக் கொண்டு செல்லச் செய்தார். அவர்கள் நட்ட மரம் இன்றளவும் இலங்கையில் உள்ளது.

Advertisement

Advertisement

இலங்கைக்கும், ஒடிசாவுக்கும் இடையே கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் வணிக உறவு தொடங்கியது. அந்த நிகழ்வை இப்போதும் ஒடிசா மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

 இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் அதே சமயம் சிங்களர்களின் நலனிலும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். எனது மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிங்களர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் யாரும் குரல் கொடுக்காதது வருத்தமளிக்கிறது என்று படாசனி கூறியுள்ளார்.

 சிங்களர்களை இந்திய பூர்வீகவாசிகளாகச் சித்திரித்து, இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம் அண்மையில் ஒடிசாவில் பிரசாரம் மேற்கொண்டார்.

 அதையடுத்து, வரலாற்றை தவறாகச் சித்திரிக்க இலங்கைத் தூதர் முயற்சிப்பதாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், மன்மோகன் சிங்குக்கு  படாசனி கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படாசனியும், கரியவாஸமும் அண்மையில் தில்லியில் சந்தித்துப் பேசினர் என்பதும், அதன் பிறகு இக்கடிதத்தை படாசனி எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்களர்களின் பூர்வீகம் குறித்து ஆராய்ச்சி செய்வதாக, ஒடிசா மாநிலத்தில் பிரசாத் கரியவாஸம் கடந்த மார்ச் மாதம் சுற்றுப் பயணம் செய்தார்.

அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை அவர் சந்தித்துப் பேசினார்.

அப்போது, "ஒடிசா மாநிலத்துக்கும், சிங்களர்களுக்கும் வரலாற்று ரீதியான தொடர்பு உள்ளது; இதை கி.பி. 6-ஆம் நூற்றாண்டு கால வரலாற்றில் காணலாம்.

 கலிங்க தேசமான தற்போதைய ஒடிசா, வங்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான் சிங்களர்கள்;

இலங்கையில் ஈழத் தமிழர்கள் 12 சதவீதத்தினர்தான் உள்ளனர். ஆனால், சிங்களர்கள் 71 சதவீதத்தினர் உள்ளனர். சிங்கள அரசன் விஜயன் ஒடிசாவில் இருந்துதான் இலங்கைக்கு வந்தார்' என்று முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் பிரசாத் கரியவாஸம் கூறினார்.

இது தொடர்பாக, ஒடிசாவில் சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.

மேலும், தில்லியில் சில நாள்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் பிரசாத் கரியவாஸம் சந்தித்துப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.