முகப்பு
புதுதில்லி

சுற்றுலா, கோடை சீசனக்குத் தயாராகிறது தலைநகர்!

குளிர்காலம் விடைபெறவுள்ள நிலையில், தலைநர் தில்லி சுற்றுலா மற்றும் கோடை சீசனுக்கு தயாராகத் தொடங்கியுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:30 AM
பகிர்:

குளிர்காலம் விடைபெறவுள்ள நிலையில், தலைநர் தில்லி சுற்றுலா மற்றும் கோடை சீசனுக்கு தயாராகத் தொடங்கியுள்ளது.

தில்லியை பொருத்தவரை கோடை காலம், மழைக்காலம், குளிர்காலம், இளம்வேனில்  காலம் என்ற வகையில் பிரிக்கலாம். இந் நிலையில், குளிர் காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வரவுள்ளது. பிப்ரவரிக்குப் பின் இளம்வேனில் காலம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக் காலத்தை சுற்றுலா சீசனுக்கு உரிய காலமாகவும் கருதலாம். மார்ச் மாதத் தொடக்கத்தில் மிதமான வெயில் இருக்கும். இதே நிலை ஏப்ரல் மாதம் வரை தொடரும். அதன் பிறகு மே மாதம் வெப்பநிலை அதிகரிக்கக் தொடங்கும். ஜூன், ஜூலை மாதங்களில் தில்லியில் வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும்.

இந் நிலையில் மிதமான வெயில் நிலவும் மார்ச், ஏப்ரல், மே மாதம் முன்பகுதி ஆகியவற்றை சுற்றுலா சீசனாக பொதுமக்களும் பயணிகளும் கருதுகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக இந்த மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் பள்ளி, கல்லூரிகளில் கோடை விடுமுறை தொடங்கிவிடும். அதன் பிறகு பள்ளிகள் ஜூன் மாதம்தான் மீண்டும் திறக்கப்படும். கல்லூரிகளைப் பொருத்தவரை ஜூலையில்தான் தொடங்கும். இதனால், கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழிப்பதற்கு நடுத்தர மக்களும் வசதி படைத்தவர்களும் தங்களது வசதிக்கு ஏற்ப சுற்றுலா சீசன் உள்ள பகுதிகளுக்கு செல்வது வழக்கம். இவர்களில் பெரும்பாலானோர் தில்லிக்கு வந்து இங்கிருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்வதை வழக்குமாகக் கொண்டுள்ளனர்.

அவர்கள் தலைநகர் தில்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்வர். அந்த வகையில், ஹரித்வார், ரிஷிகேஷ், கேதார்நாத், ஆக்ரா, மதுரா, டேராடூன், ஜெய்ப்பூர், சிம்லா, சண்டீகர், அஜ்மீர், பரத்பூர், நீம்ராணா, மண்டாவா, குவாலியர், ராம்கர், ரண்தம்போர் உள்ளிட்ட பல சுற்றுலா ஸ்தலங்களுக்கு எளிதாகச் செல்லும் வகையில் போக்குவரத்து வசதிகளும் உள்ளன.

கடந்த ஆண்டு ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் காரணமாக உத்தரகண்டில் ரிஷிகேஷ், ஹரித்வார் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கடந்த ஆண்டு வெகுவாகக் குறைந்தது. இதன் காரணமாக வியாபாரமும் பாதிக்கப்பட்டு அப் பகுதி வியாபாரிகள் சிரமத்துக்குள்ளாகினர். குறிப்பாக சாலையோர வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகி வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில், இப்போது அப் பகுதிகள் அனைத்திலும் சீரமைப்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் உள்ளன. பல்வேறு சாலைகள் செப்பனிடப்பட்டுவிட்டன. இவை மீண்டும் பழைய நிலைமைக்கு வருவதற்கு பெரும் முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, சுற்றுலா சீசன் மார்ச்சில் தொடங்கும் நிலையில், தில்லியில் வியாபாரிகள், டிராவல், ஹோட்டல் நிறுவனங்கள் சீசனை வரவேற்க ஆயத்தமாகி வருகின்றனர். இப்போதே சுற்றுலாத் திட்டங்கள் குறித்து டிராவல் நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளன. இதேபோல் பிரபல ஹோட்டல் நிறுவனங்களும் இதற்குத் தயாராகி வருகின்றன.

தில்லியை பொருத்தவரை, கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நல்ல சீதோஷ்ண நிலை நிலவியது. அதன்பிறகு கடும் குளிர் நிலவினாலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் வானிலையில் மாற்றம் காணப்பட்டது. மாதத் தொடக்கத்தில் சில நாள்கள் தில்லியில் தொடர்ந்து லேசான மழை பெய்தது. குளிர் காற்றும் வீசியது. இதனால், இந்த மாதத்தில் கடும் குளிர் உணரப்பட்டது. மேலும், அதிகாலை வேளையில் அடர் பனிமூட்டம் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. ரயில், விமான சேவைகளில் பாதிப்புகள் இருந்தன.

இந் நிலையில், மார்ச் மாதம் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ளன. இளவேனில்  காலத்தை வரவேற்க தில்லிவாசிகளும் தயாராகி வருகின்றனர். கடந்த இரண்டு மூன்று நாள்களாக வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 20 முதல் 24 டிகிரி வரை இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 7 முதல் 15 டிகிரி வரை பதிவாகியுள்ளது. பகலில் ரம்யமான சூழல் நிலவிவருகிறது. இதனால், பூங்காக்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் கூட்டம் அலைமோதுகிறது.

மருத்துவர்கள் அறிவுரை: இந் நிலையில் சுற்றுலா, கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், தில்லிவாசிகள், சுற்றுலாப் பயணிகள் தங்களது உடல்நலனைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தில்லியில் தண்ணீர் பிரச்னை, காய்கறி தட்டுப்பாடு போன்றவை நிலவவில்லை. வெப்பநிலை நன்றாக இருந்ததால் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் குறைந்திருந்தது. ஆனால், டிசம்பரில் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டதால் சளி, காய்ச்சல், ஆஸ்துமா, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

கோடை, மழை, குளிர் ஆகிய காலங்களில்தான் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பிரச்னையாக உள்ள காலமாகக் கருதப்படுகிறது. கடுமையான வெயில் நிலவினாலும் புழுக்கம் அதிகரித்தாலும் வைரஸ் கிருமிகள் வேகமாகப் பரவும்.

மேலும், தலைநகர் தில்லியில் வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தில்லி சாலைகளுக்கு தினமும் 14,000 கார்கள் புதிதாக வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், வாகனங்கள் வெளிப்படுத்தம் நச்சுப்புகையால் குழந்தைகள், முதியோர் பாதிப்புக்குள்ளாகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறைவாக உள்ளதும் இதற்குக் காரணமெனலாம். எனவே, தில்லிவாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் வருகின்ற கோடை, சுற்றுலா சீசனில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு அவ்வப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →