புதுதில்லி

ரயான் பள்ளி நிர்வாகத்தினரை பாஜக பாதுகாக்கிறது: ஆம் ஆத்மி

DIN

குருகிராமில் உள்ள ரயான் பள்ளியில் 7 வயது மாணவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரை பாஜக அரசு பாதுகாப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான ஆசுதோஷ் கூறியதாவது:
ரயான் சர்வதேச குழுவின் நிர்வாக இயக்குநரான கிரேஸ் பின்டோவை இந்திய பருத்திக் கழக (சிசிஐ) இயக்குநராக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு நியமித்தது.
ஜவுளி அமைச்சகத்தின் பொறுப்பில் இருக்கும் அந்த கழகத்தின் சார்பற்ற இயக்குநராக கிரேஸ் பின்டோ உள்ளதாக சிசிஐ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயான் பள்ளி நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரான கிரேஸ் பின்டோ பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார். அதன் காரணமாகவே, அந்தப் பள்ளி மாணவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதன் நிர்வாகத்தினரை பாஜக பாதுகாத்து வருகிறது.
அதே ரயான் கல்விக் குழுமத்தின் வசந்த் குஞ்ச் கிளைப் பள்ளியில் கடந்த ஆண்டு ஜனவரியில் 2-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்தில் இருந்த நீர்த் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்.
அப்போதே அந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி வலியுறுத்தியது. ஆனால், அந்த விவகாரத்தில் ரயான் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க பாஜக அரசு ஆர்வம் காட்டவில்லை என்று ஆசுதோஷ் கூறினார்.
இதனிடையே, குருகிராம் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரிய ரயான் சர்வதேச குழும தலைமை நிர்வாக அதிகாரி ரயான் பின்டோ, அவரது தந்தையும் நிறுவன தலைவருமான அகஸ்டின் பின்டோ, அவரது தாயாரும் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான கிரேஸ் பின்டோ ஆகியோரது மனுவை மும்பை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT