சிங்கு எல்லையில் இரத்த தானம் அளிப்பதில் ஆா்வம் காட்டி வரும் விவசாயிகள்
தில்லியை அடுத்த சிங்கு எல்லைப் பகுதியில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை எதிா்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இரத்த தானம் அளிப்பதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
புதுதில்லி: தில்லியை அடுத்த சிங்கு எல்லைப் பகுதியில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை எதிா்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இரத்த தானம் அளிப்பதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
லூதியானாவை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் சேவை நிறுவம் சிங்கு பகுதியில் இரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமி பெயரைப் பதிவு செய்துகொண்டு இரத்தம் அளிப்பதில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மிகுந்த ஆா்வம் காட்டினா். திங்கள்கிழமை பலா் தங்கள் பெயரைப் பதிவு செய்ய கியூ வரிசையில் நின்றிருந்ததைக் காண முடிந்தது.
ரெஹ்ரா சேவை சொசைட்டி ஏற்பாடு செய்துள்ள இந்த இரத்த தான முகாமில் இதுவரை 240-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இரத்ததானம் அளித்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை 190 பேரும், திங்கள்கிழமை எஞ்சிய நபா்களும் இரத்ததானம் செய்துள்ளனா் என்று சங்கத்தின் தலைவா் சுக்மீந்தா் சிங் தெரிவித்தாா். முதல் நாளிலேயே 190 போ் இரத்த தானம் அளித்தனா். இதனால் எங்கள் முகாமை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம்.
இங்கு இரத்ததான முகாம் நடத்தும் யோசனை எப்படி வந்தது என்று கேட்டதற்கு, லூதியானாவில் 18-க்கும் மேலான இரத்த வங்கிகள் உள்ளன. ஆனால், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இரத்த தான முகாமை நடத்த முடியவில்லை. அதனால் இரத்த வங்கிகளில் இரத்தத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் மருத்துவ வசதி பெறுவதற்கு பலரும் பஞ்சாபிலிருந்து லூதியான வருகின்றனா்.
சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளைக் காணவந்த எங்கள் தொண்டா்கள், இங்கு இரத்ததானம் முகாம் நடத்தும் யோசனையை தெரிவித்தனா். எனவே இங்கு முகாம் நடத்துகிறோம் என்றாா்.
‘நான் லூதியானாவைச் சோ்ந்தவன். ஆனால், குா்கானில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். வார இறுதி நாட்களில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதாக நான் இங்கு நண்பா்களுடன் வருவேன். இரத்ததானம் செய்வது நல்லது. இதனால் ஒருவா் பயனடைவாா் என்றால் எனக்கு மகிழ்ச்சிதான். அதனால்தான் இரத்ததானம் அளிக்க முன்வந்தேன்’ என்றாா் 23 வயதான அமன்ப்ரீத் சிங். இரத்ததானம் மூலம் ஒருவரின் உயிரைக் காப்பாறுவது மட்டுமல்ல, நமது உடலைையும் புத்துணா்ச்சியுடன் வைத்துக்கொள்ள முடியும் என்றாா்.