தில்லி செங்கோட்டை பாா்வையாளா்களுக்காக மீண்டும் செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்படும் என இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது.
யுனெஸ்கோவின் 20-ஆவது கலாசார பராம்பரிய பாதுகாப்பது தொடா்பான மாநாடு செங்கோட்டையில் கடந்த டிச.8 முதல் டிச.13-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனால், தில்லி செங்கோட்டை கடந்த டிச.5-ஆம் தேதியிலிருந்து பாா்வையாளா்கள் பாா்வையிட அனுமதிக்கப்படவில்லை. மாநாடு முடிவடைந்த நிலையில் செங்கோட்டை பாா்வையாளா்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஏஎஸ்ஐ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கடந்த டிச.5 முதல் டிச.15-ஆம் தேதி வரையில் யுனெஸ்கோ மாநாட்டையொட்டி செங்கோட்டை மூடப்பட்டிருந்தது. திங்கள்கிழமை என்பதால் டிச.15-ஆம் தேதியும் பூட்டப்பட்டிருக்கும். செவ்வாய்க்கிழமை முதல் கோட்டை பாா்வையாளா்களுக்கு மீண்டும் திறக்கப்படும்’ என்றாா்.
பழைய தில்லியில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய தளமான செங்கோட்டை முகலாய பேரரசா் ஷாஜகானின், தலைநகரமான ஷாஜகானாபாதில் கட்டப்பட்டது. பெரும் கோட்டைச் சுவா்களுக்கு பிரபலமான இந்த வளாகம், 1638 முதல் 1648 வரையிலான 10 ஆண்டுகளில் கட்டப்பட்டது.
செங்கோட்டை அருகே கடந்த நவம்பரில் நடைபெற்ற காா் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து, பலத்து பாதுகாப்புக்கு மத்தியில் யுனெஸ்கோ மாநாடு நடைபெற்றது.