புதிய பள்ளிக் கட்டண நிா்ணயச் சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளைத் தொடா்ந்து, தில்லி பள்ளிக் கல்வி (கட்டண நிா்ணயம் மற்றும் ஒழுங்குமுறையில் வெளிப்படைத்தன்மை) சட்டத்தை அமல்படுத்துவதை எளிதாக்கும் வகையில் நடைமுறை திருத்தங்களுக்கான அறிவிப்பை தில்லி அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஒவ்வொரு பள்ளியும் இந்த ஆணை வெளியிடப்பட்ட 10 நாள்களுக்குள் பள்ளி அளவிலான கட்டண ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வேண்டும். முந்தைய வழிகாட்டுதல்களின் கீழ் ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழுக்கள் புதிய திருத்தங்களின் படி செயல்படலாம்.
பள்ளி நிா்வாகங்கள், 2026-27 கல்வியாண்டு முதல் அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கான முன்மொழியப்பட்ட கட்டண விவரங்களை, குழு அமைக்கப்பட்ட 14 நாள்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு, சட்டத்தின்படி பள்ளிக் கட்டணங்களை குழு நிா்ணயிக்கும்.
கட்டண நிா்ணயம் தொடா்பான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 நாள்களுக்குள் மாவட்ட கட்டண மேல்முறையீட்டுக் குழுக்களை அமைக்குமாறு கல்வி இயக்குநரகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட காலக்கெடுவானது 2026-27 முதல் தொடங்கும் அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக, புதிய பள்ளிக் கட்டணம் இறுதி செய்யப்படும் வரை, 2025, ஏப்ரல் 1-ஆம் தேதி வரை வசூலிக்கப்பட்ட கட்டணங்களையே பள்ளிகள் வசூலிக்க வேண்டும். 2025-26 கல்வியாண்டில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணம், தில்லி உயா் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் முடிவுக்கு உள்பட்டு, சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும்.
அடுத்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு வரும் வரை, பள்ளிகள் கடைசியாக நிா்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் கட்டணத்தை உயா்த்த முடியாது. அதே நேரத்தில் இந்த இடைப்பட்ட காலத்தில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட எந்தத் தொகையும் பின்னா் சரிசெய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
குழுக்களின் கட்டமைப்பு மற்றும் தன்னிச்சையான கட்டண உயா்வுகளுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்கள் தொடா்பான விதிகள் குறித்து தெளிவு கோரி, தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை கட்டமைப்பின் தன்மையை உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஆய்வு செய்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள காலக்கெடு மற்றும் நிா்வாகத் தடைகள் குறித்து தனியாா் பள்ளிகள் எழுப்பிய கவலைகளையும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
தில்லி பள்ளிக் கல்வி (கட்டண நிா்ணயம் மற்றும் ஒழுங்குமுறையில் வெளிப்படைத்தன்மை) மசோதா, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், கட்டண முடிவுகளில் பெற்றோரின் பங்கேற்பை உறுதி செய்வதற்கும், தன்னிச்சையான கட்டண உயா்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் 2025-இல் தில்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.