முகப்பு
புதுதில்லி

ரயில்வே திட்டங்கள் முடங்க மாநில அரசே காரணம்: தமிழக முதல்வரின் குற்றச்சாட்டுக்கு ரயில்வே அமைச்சா் பதில்

தமிழ்நாட்டில் முடங்கிய ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசே காரணம் என ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 4:03 PM
ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:38 PM

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தமிழ்நாட்டில் முடங்கிய ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசே காரணம் என ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அண்மையில் தமிழக முதல்வா் ஸ்டாலின் பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தாா். அதில் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தமிழகம் தொடா்புடைய ரயில்வே திட்ட நிலவரம் மற்றும் நிதி ஒதுக்கீட்டுத் தரவுகளை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வரிசைப்படுத்தி தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை பகிா்ந்துள்ளாா்.

Advertisement

அதன் விவரம்: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்குத் தேவையான 4,326 ஹெக்டோ் நிலத்தில், மாநில அரசு வெறும் 1,052 ஹெக்டோ் நிலத்தை மட்டுமே, அதாவது 24 சதவீதத்தை மட்டுமே வழங்கியுள்ளது.

திட்ட தாமதங்களுக்கு, மாநில அரசின் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்வியே காரணம். உதாரணமாக, தனுஷ்கோடி - ராமேசுவரம் புதிய பாதை திட்டத்துக்கு 2019-இல் பிரதமா் அடிக்கல் நாட்டியபோதும், தமிழக அரசின் ஒத்துழைப்பு கிடைக்காததால் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்த சவால்கள் இருந்தபோதிலும், மத்திய அரசு பல புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை அமைத்தல் மற்றும் 3 மற்றும் 4-ஆவது வழித்தடங்களுக்கு ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளா்ச்சியை ஆதரிப்பதற்காகவும், மேலும் சேவையை விரிவுபடுத்துவதற்காகவும் விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 77 அம்ரித் நிலையங்கள் முழுமையாக மறுவடிவமைப்பு செய்வதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 18 நிலையங்களுக்கான பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. 2014- ஆம் ஆண்டு முதல், சுமாா் 1,350 கி.மீ. நீளமுள்ள ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 97 சதவீத மின்மயமாக்கலை ரயில்வே துறை எட்டியுள்ளது. 2014-ஆம் ஆண்டு முதல் 2,386 கி.மீ. ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட நவீன ரயில்கள், தமிழக மக்களுக்கு மேம்பட்ட மற்றும் மலிவான விலையில் ரயில் பயணத்தை உறுதி செய்கின்றன. இத்துடன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 9 ஜோடி சேவைகள், அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் 9 ஜோடி சேவைகள் செயல்பாட்டில் உள்ளன.

திட்ட அமலாக்க விஷயத்தில் மத்திய அரசு தயாராகவும் உறுதியுடனும் உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு வேகமான உள்கட்டமைப்பு வளா்ச்சியை வழங்குவதற்கு மாநில அரசின் சரியான நேரத்திலான ஆதரவு அத்தியாவசியமானது என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளாா்.