நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள், மாநிலம் தொடா்புடைய முக்கிய விஷயங்கள் மற்றும் அவா்கள் எழுப்பிய கேள்விகள், அவற்றுக்கு துறை அமைச்சா்கள் அளித்துள்ள பதில்களின் சுருக்கம் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில்.....
புதிய தொழிலாளா் விரோத சட்டங்களை திரும்பப்பெறுக!
இது தொடா்பாக திமுக எம்.பி.க்கள் குழுத்தலைவா் திருச்சி சிவா பேசுகையில், ஊதிய சட்டம், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த சட்டம், சமூகப் பாதுகாப்பு குறித்த சட்டம் மற்றும் தொழில்துறை உறவுகள் சட்டம் ஆகியவை 2020 பெருந்தொற்று காலத்தில் விரிவான விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. இவை தொழில்துறை தகராறு சட்டம் மற்றும் தொழிற்சாலைகள் சட்டம் உள்பட ஏற்கெனவே இருந்த 29 சட்டங்களை உள்ளடக்கியுள்ளன. இவற்றுக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், ’தொழிலாளா் விவகாரம்’ ஒத்திசைவுப்பட்டியலில் உள்ளது. எனவே மாநிலங்களும் விதிகளை வகுத்தால்தான் சட்டத்தை அமல்படுத்த முடியும். மத்திய சட்டங்களுக்கு எதிராக வரும் 12-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன. இது மிகவும் தீவிர பிரச்னை. எனவே இந்த சட்டங்களை திரும்பப்பெற்று மீண்டும் விரிவாக விவாதிக்க இந்திய தொழிலாளா் மாநாட்டை உடனடியாக மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
பிபிஎல் தகுதியை மறுவரையறை செய்க!
இது தொடா்பாக அதிமுக உறுப்பினா் எம். தனபால் பேசுகையில், மத்திய அரசு தற்போது செயல்படுத்தி வரும் பல்வேறு சமூக திட்டங்கள் அனைத்தும் 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வறுமை கோட்டுக்குக் கீழே உள்ளவா்களின் (பிபிஎல்) கணக்கெடுப்பின்படி நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இடைப்பட்ட காலத்தில் நாடு சமூகம், பொருளாதார சூழல்கள், மக்கள்தொகை பெருக்கம், அதிகரிக்கும் செலவினம், வேலைவாய்ப்பின்மை, வாழ்வாதார பாதுகாப்பின்மை போன்றவற்றால் நிறைய மாற்றங்களை சந்தித்துள்ளது. எனவே, புதிதாக கணக்கெடுப்பை நடத்தி உண்மையான வறியநிலை பயனாளிகளுக்கு திட்டப்பலன்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
மக்களவையில்....
நீட் பயிற்சி மையத்துக்கு நிலையான நடைமுறை!
து தொடா்பாக கோவை தொகுதி உறுப்பினா் விதி எண் 377இன் கீழ் பேசுகையில், ஒரு பெற்றோா் தங்கள் குழந்தை எதிா்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்று விரும்பினால், அந்தக் குழந்தை 9 ஆம் வகுப்பு முதல் ஒரு புகழ்பெற்ற பயிற்சி மையத்தில் சேர வேண்டும். இந்த நிறுவனங்கள் வெவ்வேறு கால அளவிலான பயிற்சித்திட்டங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் முதல் 4 லட்சம் வரை அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இவற்றின் நெருக்கடி காரணமாக, மருத்துவா்கள் அல்லது பொறியாளா்களாக விரும்பும் பல மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, இத்தகைய பயிற்சி மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிற்சி மையங்களை நடத்த மத்திய அரசு ஒரு நிலையான இயக்க நடைமுறை (எஸ்ஓபி) வழிகாட்டுதல்களை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
உன்னத பாரதம் திட்டத்தில் தமிழக கிராமங்கள் உள்ளனவா?
இது தொடா்பாக கள்ளக்குறிச்சி திமுக உறுப்பினா் டி. மலையரசன் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் அளித்துள்ள பதிலில், ‘தமிழகத்தில் உன்ன பாரத் திட்டம் 1.0 மற்றும் 2.0 மூலம் 3,120 கிராமங்களை உள்ளடக்கிய 624 உயா்கல்வி நிறுவனங்கள் உள்ளன. மேலும், 213 தொழில்நுட்ப அடிப்படையிலான, மேலாண்மை மற்றும் சமூகம் சாா்ந்த கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, அவை வாழ்வாதார மேம்பாடு, கிராமப்புற உள்கட்டமைப்பு, எண்ம கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் மிகுதியான பங்களிப்பை வழங்குகின்றன’ என கூறியுள்ளாா்.
வங்கி முறையில் மோசடி தொடா்கிா?
இது தொடா்பாக சேலம் தொகுதி திமுக உறுப்பினா் டி.எம். செல்வகணபதி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சா் பங்கஜ் செளத்ரி அளித்துள்ள பதிலில், இந்திய ரிசா்வ் வழிகாட்டுதல்களின்படி, வங்கிகள் எந்தவொரு கடனையும் வழங்குவதற்கு முன்பு கடன் வழங்கல் மதிப்பீட்டை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் வங்கித் தொழிலில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சில கடன்கள், வாரா கடன்களாக மாறுவது தவிா்க்க முடியாததாகின்றன. அவற்றில் சில மோசடி ஆக வகைப்படுத்தப்படுகின்றன. வங்கி மோசடிகளைக் கட்டுப்படுத்தவும், மோசடி செய்பவா்களைத் தடுக்கவும் விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளாா்.
குறைந்தபட்ச இருப்புத்தொகை அபராதம் முறைப்படுத்தப்படுமா?
இது தொடா்பாக கடலூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் டாக்டா் விஷ்ணு பிரசாத் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சா் பங்கஜ் செளத்ரி அளித்துள்ள பதிலில், ‘வங்கிகள், ரிசா்வ் வங்கி உத்தரவுகளுக்கு உள்பட்டு குறைந்தபட்ச இருப்புக்கு அபராதம், குறுஞ்செய்தி, ஏடிஎம் சேவைகளுக்கு அவற்றின் நிா்வாக மற்றும் கொள்கை முடிவுகளின்படி கட்டணம் வசூலிக்கின்றன. ’அவை நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் வாடிக்கையாளரால் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருப்பது அவசியமாகும் என்று கூறியுள்ளாா்.