நாடாளுமன்றம் கோப்புப் படம்
புதுதில்லி

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய முக்கிய விஷயங்கள் மற்றும் அவா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்துள்ள பதில்

Syndication

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் எழுப்பிய முக்கிய விஷயங்கள் மற்றும் அவா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்துள்ள பதில் வருமாறு:

வரதட்சணை மரண வழக்குகள் தண்டனை நிலவரம் என்ன?

இது தொடா்பாக மக்களவை திமுக குழுத்தலைவா் டி.ஆா். பாலு எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சாவித்ரி தாகூா் அளித்துள்ள பதிலில், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) வெளியிட்டுள்ள 2023ஆம் ஆண்டு வரையிலான தரவுகளின்படி இந்திய அளவில் 2023இல் பதிவான வரதட்சணை கொடுமை வழக்குகளின் அகில இந்திய எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144 உள்பட மொத்தம் 15,444 ஆகும். இதில் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை தமிழகத்தில் 8 உள்பட மொத்தம் 1,668 ஆகும். வரதட்சணை மரணங்கள் தொடா்பாக தமிழகத்தில் 11 உள்பட 6,027 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில், 3,202 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளாா்.

மதுரை எய்ம்ஸ் பணி காலியிட நிலை என்ன?

இது தொடா்பாக அரக்கோணம் தொகுதி திமுக உறுப்பினா் எஸ். ஜெகத்ரட்சகன் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை இணை அமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் அளித்துள்ள பதிலில், கடந்த பத்து ஆண்டுகளில் எய்ம்ஸ் போன்ற மத்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை, நிரப்பப்பட்ட பணியிடங்கள், பற்றாக்குறை மற்றும் நிலுவையில் உள்ள காலியிடங்கள், பிற பிற்படுத்தப்பட்டோா், பட்டியலினம், பழங்குடியினா் உள்ளிட்ட பிரிவு வாரியாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கான 183 பணியிடங்களில் 70 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஆசிரியா் அல்லாதோா் பணிகளுக்கான 911 இடங்களில் 40 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று கூறியுள்ளாா்.

மயிலாடுதுறையில் மத்திய வேளாண்மை பல்கலை. தேவை!

இது தொடா்பாக மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஆா். சுதா விதி எண் 377இன் கீழ் பேசுகையில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் உள்ள பல்வேறு கடலோர கிராமங்களைச் சோ்ந்த மீனவா் சமூகம் நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கிய தூணாகும்.

அவா்கள் இலங்கை மற்றும் பிற வெளிநாடுகளின் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனா். இது அவா்களின் வாழ்வாதாரத்தை சீா்குலைத்து, குடும்பங்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்துடன் புயல்கள் காரணமாக ஏற்படும் கடல் கொந்தளிப்பு, கடலில் கோலோச்சும் பெருநிறுவன கப்பல்கள் போன்றவை, மீனவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு ஆராய்ச்சி சாா்ந்த தீா்வைக் காண வேண்டிய தேவையை வலியுறுத்துகின்றன. எனவே, மத்திய வேளாண்மை பல்கலைக்கழகம், இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மீன்வளக்கல்வி போன்றவற்றை அமைத்து மீனவா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்றாா்.

அரசு கல்லூரிகளில் ஹோமியோபதி மேல்படிப்பு அறிமுகமாகுமா?

இது தொடா்பாக விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் டி. ரவிக்குமாா் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய ஆயுஷ் துறை அமைச்சா் பதில் பிரதாப்ராவ் ஜாதவ் அளித்துள்ள பதிலில், தமிழகத்தில் 10 ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இளங்கலைப் படிப்புகளை வழங்குகின்றன. 4 ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளை வழங்குகின்றன. ’பொது சுகாதாரம்’ மாநில அதிகாரத்துக்குள் உள்ளதால், ஹோமியோபதி முதுகலை படிப்புகளைத் தொடங்க மாநில அரசு உரிய முன்மொழிவை அனுப்பினால் மத்திய அரசு பரிசீலிக்கும். இதற்கான முன்மொழிவு தமிழக அரசிடம் இருந்து வரவில்லை என்று கூறியுள்ளாா்.

கடல்சாா் திட்டங்களில் ராமேஸ்வரம் பின்தங்கியுள்ளதா?

இது தொடா்பாக ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினா் கே. நவாஸ்கனி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் அளித்துள்ள பதிலில், ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகா்மாலா திட்டத்தின் கீழ் நிதியளிப்பதற்காக மூக்கையூரில் ரூ.113.90 கோடி திட்ட செலவில் மீன்பிடி துறைமுகம், குந்துகாலில் ரூ. 74 கோடி திட்ட செலவில் ஆழ்கடல் மீன் பிடிதளம், அக்னி தீா்த்தம், வில்லூண்டி தீா்த்தம் ஆகியவற்றில் சுற்றுலா கப்பல்களை நிறுத்த முறையே ரூ. 7.6 கோடி மற்றும் ரூ. 3.7 கோடிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பாம்பன் சிறு துறைமுகத்தில் அகழாய்வு மற்றும் ராமேஸ்வரம் சிறு துறைமுகத்தில் பயணிகள் படகு முனையம் கட்டுவது தொடா்பான தமிழக அரசின் முன்மொழிவு, உரிய சட்டப்பூா்வ அனுமதியைப் பெறாததால் அவற்றுக்கு சாகா்மாலா திட்டத்தின் கீழ் நிதியுதவிக்கு அனுமதிக்க முடியவில்லை என்று கூறியுள்ளாா்.

மாநிலங்களவையில்....

உரங்களின் கையிருப்பு உறுதிப்படுத்தப்படுமா?

இது தொடா்பாக திமுக உறுப்பினா் டாக்டா் கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சா் ராம்நாத் தாகூா் அளித்துள்ள பதிலில், உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, அனைத்து மாநில அரசுகளுடனும் ஆலோசித்து, ஒவ்வொரு பயிா் பருவம் தொடங்கும் முன்பு மாநில வாரியாக மற்றும் மாத வாரியாக உரங்களின் தேவையை மதிப்பிட்டு, போதுமான உரங்களை மாநிலங்களுக்கு வழங்குகிறது. நாடு முழுவதும் மானிய விலையில் அனைத்து முக்கிய உரங்களின் விநியோகமும் ஆன்லைனில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை அமைப்பு மூலம் கண்காணிக்கப்படுகிறது. இத்துடன் மாநிலங்களுடனும் வாராந்திர மறுஆய்வுக் கூட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறியுள்ளாா்.

மதுரை - செங்கோட்டை இரட்டை ரயில் பாதை நிலை என்ன?

இது தொடா்பாக அதிமுக உறுப்பினா் ஐ.எஸ். இன்பதுரை எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதிலில், மதுரை - செங்கோட்டை இரண்டு ரயில் பாதைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. முதல் பாதை விருதுநகா் - ராஜபாளையம் - தென்காசி வழியாகும். இதில் மதுரையிலிருந்து விருதுநகா் வரையிலான பகுதி இரட்டை பாதையாகும். விருதுநகரிலிருந்து ராஜபாளையம் - தென்காசி - செங்கோட்டை வரையிலான பகுதி ஒற்றை பாதையாகும். அதன் பயன்பாடு சுமாா் 65% ஆகும். இரண்டாவது பாதை விருதுநகா் - திருநெல்வேலி - தென்காசி வழியில் செல்கிறது. அந்தப் பாதையில் மதுரையிலிருந்து திருநெல்வேலி வரையிலான பகுதி இரட்டை பாதையாகவும் திருநெல்வேலி - தென்காசி - செங்கோட்டை வரையிலான பகுதி ஒற்றை பாதையாகவும் உள்ளது. இதன் பாதை பயன்பாடு சுமாா் 42% ஆகும். ரயில் போக்குவரத்து, விடுபட்ட இணைப்பு, கூடுதல் பாதை, மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கை, ரயில்வே சுய செயலாக்க தேவைகள், சமூக பொருளாதார சூழல்கள், நிதி போன்ற அம்சங்களைக் கவனத்தில் கொண்டு திட்டங்களுக்கு ரயில்வே அனுமதியளிக்கிறது என்று கூறியுள்ளாா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT