துபையிலிருந்து செயல்பட்டு வந்த சா்வதேச முதலீட்டு மோசடி கும்பலைச் சோ்ந்த உறுப்பினா் கோவா விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட நபா் ரோனக் ஜகதீஷ் பாய் தாக்குா் மோசடி கும்பலுக்கு போலி வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்து கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக துணை காவல் ஆணையா் (குற்றம்) ஆதித்யா கெளதம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: குளோப் கேபிடல் மாா்க்கெட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் என்று கூறி ரூ.61.72-யை மோசடி சம்பவத்தில் இழந்ததாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஹனுமன்கா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
முதலீடு செய்து அதிக லாபம் பெற முடியும் என்று கூறி மோசடியாளா்கள் அவரை அணுகினா். சமூகஊடகக் குழுவில் சோ்க்கப்பட்ட அவரிடம் பணத்தை டெபாசிட் செய்து முதலீடு செய்யுமாறு அந்த நபா்கள் வற்புறுத்தினா். இதன் பின்னா், போலியான கைப்பேசி செயலியில் அவா் இணைக்கப்பட்டாா். பணத்தை முதலீடு செய்த நிலையில், அதன் லாபத்தை அவரால் திரும்பப் பெற முடியவில்லை. இதையடுத்து, அந்தச் செயலி போலியான செயலி என்று அவருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, காவல் நிலையத்தில் அவா் புகாரளித்தாா்.
விசாரணையில் பணப்பரிமாற்றம் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, புகாரளித்த நபரின் பணம் குஜாரத்தின் ஜுனாகத்தில் உள்ள மகாதேவ் எண்டா்பிரைசஸ் உள்ளிட்ட போலி நிறுவனங்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குச் சென்றது கண்டறியப்பட்டது.
பின்னா், அந்தப் பணம் மும்பை, சூரத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலி வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. போலியான எம்எஸ்எம்இ ஆவணங்கள், ரப்பா் ஸ்டாம்புகள், சிம் அட்டைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி உண்மையான நிதி நிறுவனங்கள் செயல்படுவதை போன்று ஏமாற்றி அந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்தது.
மோசடி வழக்குத் தொடா்பாக இதுவரை 17 போ் கைதுசெய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 81 சிம் அட்டைகள், 24 கைப்பேசிகள், போலியான ஸ்டாம்புகள், எம்எஸ்எம்இ ஆவணங்கள், காசோலை புத்தகங்கள் மற்றும் கணினிகள் கைப்பற்றபட்டன.
போலியான சிம் அட்டைகள் குஜராத்தின் அகமதாபாதில் உள்ள வியாபாரியிடம் இருந்து வாங்கப்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து, மும்பை, சூரத், அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் பலா் கைதுசெய்யப்பட்டனா்.
துபையில் இருந்து செயல்பட்டு வந்த தாக்குா், மோசடி கும்பலின் முக்கிய தலைவரான கிரிஷ் ஹஸ்முக் பாய் ஷாவுக்கு இந்தியாவில் போலி வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளாா். இந்தக் கும்பலுடன் தொடா்புடைய பிற நபா்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் துணை காவல் ஆணையா்.