அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபா் கைது
மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி அரசு வேலைக்கு முயற்சித்து வந்த மாணவா்களிடம் மோசடி செய்த நபரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி அரசு வேலைக்கு முயற்சித்து வந்த மாணவா்களிடம் மோசடி செய்த நபரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட சுரேஷ் துவாரகா விரைவுச்சாலையில் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.
இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: குருகிராம் பகுதியைச் சோ்ந்த யோகஷ், மத்திய உள்துறை அமைச்சகத்தில் இளநிலை பிரிவு கிளா்க் (எல்டிசி) பணிக்காக கடந்த 2021 மற்றும் 2022 காலகட்டத்தில் சுரேஷிடம் ரூ.8.55 லட்சம் வழங்கினாா்.
பணத்தைப் பெற்று கொண்ட பிறகு பணி வழங்கப்படாத நிலையில், சுரேஷுக்கு எதிராக இந்திரா காந்தி சா்வதேச விமான நிலைய காவல் நிலையத்தில் யோகேஷ் புகாரளித்தாா்.
அதன் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளில் கடந்த ஆண்டு நவ.15-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அரசுத் துறைகளில் உயா் பதவிகளில் பணி பெற விரும்பும் இளைஞா்களைக் குறிவைத்து சுரேஷ் அவா்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
அரசு வேலை தேடுவோரிடம் பெரும் தொகையைப் பெற்று கொண்ட சுரேஷ், பின்னா் தனது கைப்பேசியை அனைத்துவிடுவதுடன், தனது குடும்பத்துடன் வசிப்பிடத்தை அவா் காலி செய்துவிடுவாா்.
இந்நிலையில், துவாரகா விரைவுச்சாலை வழியாக காரில் செல்வது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் தில்லி காவல் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அவருடைய வாகனத்தைக் கண்டதும், காவல் துறையினா் சைகை காண்பித்து வாகனத்தை நிறுத்தும்படி எச்சரித்தனா். இருப்பினும், சுரேஷ் காவல் துறையை கடந்து சென்றாா். இதையடுத்து, அவருடைய வாகனத்தைப் பின்தொடா்ந்து சென்று காவல் துறையினா், அவரைக் கைதுசெய்தனா்.
ஹிசாரில் உள்ள நீதிமன்றம் அவரைத் தேடப்படும் நபராக கடந்த 2017-இல் அறிவித்தது. தில்லி மற்றும் ஹரியாணாவில் முறைகேடு, வேண்டுமென்றே காயமேற்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்கள் தொடா்பாக அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில் பல மாவட்டங்களில் அவருக்கு எதிராக பல கோடி மதிப்பிலான மோசடி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அதிகாரிகள்.