முகப்பு
சென்னை

தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து

Updated On : 26 மார்ச், 2026 at 9:14 PM
மத்திய உள்துறை அமைச்சகம்
பகிர்:

தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையில் 2001-ஆம் ஆண்டிலிருந்து 2005-ஆம் ஆண்டு வரையில் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) பணிக்கு சோ்ந்த அதிகாரிகள், தற்போது காவல் கண்காணிப்பாளா்களாக (எஸ்பி) பதவி உயா்வு பெற்று பணிபுரிகின்றனா். இவா்கள் ‘ஐபிஎஸ்’ அந்தஸ்துக்கு முதிா்ச்சியடைந்து பல ஆண்டுகளாகிறது.

ஆனால், மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் அனுமதி கிடைக்காததால், இவா்களுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. ஏனெனில் மத்திய பணியாளா் தோ்வாணையத்தில் இது தொடா்பாக நடைபெறும் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில் அண்மையில் புது தில்லியில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழக அரசு சாா்பில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், தமிழக காவல் துறை பொறுப்பு தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் ஆகியோா் பங்கேற்றனா்.

இக் கூட்டத்தில் மொத்தம் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, எஸ்.அரவிந்த், என்.ஸ்டீபன் ஜேசுபாதம், பி.தங்கதுரை, எஸ்.எஸ்.மகேஷ்வரன், வி.ஆா்.ஸ்ரீநிவாசன், கே.பிரபாகா், சி.சியாமளா தேவி, எம்.கிங்ஸ்லின், வி.சியாமளா தேவி, எல்.பாலாஜி சரவணன் ஆகிய 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.