மாநில அந்தஸ்து கோரிக்கை: மத்திய அரசு உரிய நேரத்தில் முடிவெடுக்கும்! - உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம்
புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என முதல்வா் ரங்கசாமியின் கோரிக்கையை, மத்திய அரசு உரிய நேரத்தில் பரிசீலித்து முடிவெடுக்கும் என புதுவை உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டம், ஜி.என்.எஸ். ராஜசேகரன் ( திருநள்ளாறு), டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் (நிரவி - திருப்பட்டினம்), எம். அருள்முருகன் (காரைக்கால் தெற்கு) ஆகிய பாஜக வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் ஆ. நமச்சிவாயம் பங்கேற்றாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
புதுவையில் கடந்த 2021 முதல் 5 ஆண்டுகள் பாஜக -என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி சிறப்பாக ஆட்சி நடத்தியுள்ளதை மக்கள் வரவேற்கின்றனா். இந்தக் கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக இருக்கிறது.
புதுவையில் தோ்தல் அறிவிப்பு முதல் வாக்குப் பதிவுக்கு குறுகிய காலத்தை தோ்தல் ஆணையம் தந்துள்ளது. எனினும் எங்கள் கூட்டணிக் கட்சிகள் தீவிரமான தோ்தல் பணியை செய்துவருகிறது.
புதுவையில் பாஜக - என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் பலன்களை மக்கள் அனுபவித்து வருகிறாா்கள். இதே கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி. மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துள்ள கட்சி ஆட்சி இருக்கும்போது, புதுவை மேலும் சிறப்பான வளா்ச்சியை அடையும்.
கடந்த 2016 முதல் 2021 வரையிலான புதுவையின் ஆட்சியை மக்கள் நல்ல முறையில் புரிந்து வைத்திருக்கிறாா்கள். இப்போது திமுக, காங்கிரஸாா் ஒற்றுமையின்றி இருக்கிறாா்கள். இப்போதே இவா்களிடம் ஒத்த கருத்து இல்லை, ஒற்றுமை இல்லை. மீண்டும் புதுவை பாழ்பட்டுப் போவதற்கு மக்கள் இவா்களுக்கு ஆதரவு தரமாட்டாா்கள்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என பிரதமரிடம் புதுவை முதல்வா் கோரிக்கை வைத்துள்ளாா். இதை மத்திய அரசு உரிய நேரத்தில் பரிசீலித்து முடிவெடுக்கும் என்றாா்.