புதுதில்லி

தலைநகரில் ஒரே வாரத்தில் 800 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

DIN

தலைநகர் தில்லியில் டெங்கு அதி தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 800 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சியின் அனைத்துப் பிரிவுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 
தில்லியைப் பொருத்தவரை கொசுக்கள் மூலம் பரவக் கூடிய மலேரியாவின் தாக்கம் வழக்கமாக ஜூலை மாதம்தான் ஆரம்பிக்கும். ஆனால், நிகழாண்டில் டெங்குவின் தாக்கம் ஜனவரியிலேயே ஆரம்பித்துவிட்டது. ஜனவரியில் 6 பேர், பிப்ரவரியில் 3 பேர், மார்ச்சில் ஒருவர், ஏப்ரலில் இருவர், மே மாதத்தில் 10 பேர், ஜூனில் 8 பேர், ஜூலையில் 19 பேர், ஆகஸ்டில் 58 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், செப்டம்பரில் இருந்து தில்லியில் டெங்கு நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்தது. இதையடுத்து, செப்டம்பரில் 374 பேர், அக்டோபரில் 1, 114 பேர் டெங்கால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 800 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது: 
தில்லியில் செப்டம்பர் மாதத்தில் இருந்து, கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, டெங்கு நோயின் தாக்கம் செப்டம்பர் மாதத்தில் இருந்து மிக அதிகமாக உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தில்லியில் டெங்கு நோயால் சுமார் 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லியில் கொசுப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மாநகராட்சிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று கொசுப் பெருக்கம் தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். சுமார் 1 லட்சம் பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கொசுப் பெருக்கத்தை தடுக்கத் தவறியவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், அதிகரித்து வரும் டெங்குவை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சிப் பகுதிகளில் கொசு மருந்துகள் தினம்தோறும் தெளிக்கப்படுகின்றன. மாநகராட்சி மலேரியா தடுப்பு பிரிவினர் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்கின்றனர். மேலும், தில்லியில் கொசுக்களால் பரவும் நோய்கள் தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டும் வகையில் பல்வேறு செயல்திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறோம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் கூறும் அளவைவிட தில்லியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது: 
மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையை வைத்து மாநகராட்சி அறிக்கை தயாரிக்கப்படுகிறது. ஆனால், டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வருவதுடன், பலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை மாநகராட்சி அறிக்கையில் இடம்பெறவில்லை. இதன்படி பார்த்தால் தில்லியில் டெங்கு பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT