ரயில் மோதி விபத்து: 3 ஆண்டுகளில் 50,000 பேர் பலி
நாடு முழுவதும் கடந்த 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில், ரயில் மோதி நேரிட்ட விபத்துகளில் சுமார் 50 ஆயிரம் பேர்
நாடு முழுவதும் கடந்த 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில், ரயில் மோதி நேரிட்ட விபத்துகளில் சுமார் 50 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக ரயில்வே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அமிருதசரஸில் தண்டவாளத்தையொட்டிய ஒரு மைதானத்தில் கடந்த 19-ஆம் தேதி தசரா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தண்டவாளத்தில் நின்றபடி நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதியது. இதில் 59 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரயில் மோதி நேரிட்ட விபத்துகளில் 49,790 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக வடக்கு ரயில்வே மண்டலத்தில் 7,908 பேரும், தெற்கு மண்டலத்தில் 6,149 பேரும், கிழக்கு மண்டலத்தில் 5,670 பேரும் உயிரிழந்துள்ளனர்.
விதிமுறைகளை மீறி தண்டவாளத்தை கடந்து செல்வது, பாதுகாப்பு விதிமீறல், எச்சரிக்கை அறிவிப்பு மீறல், மேம்பாலத்தை தவிர்த்து தண்டவாளத்தை கடந்து செல்லுதல், செல்லிடப்பேசியில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து செல்லுதல் போன்ற காரணங்களால் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்தை தவிர்ப்பது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வது, தண்டவாளத்தை சேதப்படுத்துதல் போன்றவை ரயில்வே சட்டம் 1989ஆம் ஆண்டு 47வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். நிகழாண்டு தொடக்கம் முதல் செப்டம்பர் வரையிலும் 1,20,923 பேர் ரயில்வே பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2.94 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1,75,996 பேர் ரயில்வே பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.