மக்களவைத் தேர்தல்: குடிசைப் பகுதி வாக்குகளைக் குறிவைக்கும் பாஜக!
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளையும் தக்கவைக்கும் நோக்கில், பல்வேறு தேர்தல்
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளையும் தக்கவைக்கும் நோக்கில், பல்வேறு தேர்தல் உத்திகளை பாஜக வகுத்து வருகிறது. குறிப்பாக குடிசைப் பகுதிகளில் வசிப்போரின் வாக்குகளைக் கவர்வதற்கு பிரசார வியூகத்தை அக்கட்சி உருவாக்கி வருகிறது.
தில்லியில் மொத்த வாக்காளர்கள் 1,36,95,291 பேர். இவர்களில் குடிசைப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் மக்கள் வசிப்பதால் அவர்களின் வாக்கு வங்கியானது பிரதான அரசியல் கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிப்பதாக இருந்து வருகிறது. இந்த வாக்கு வாங்கியை காங்கிரஸ் பல ஆண்டுகளாக தக்க வைத்திருந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேர்தல் களத்தில் இறங்கிய பிறகு இந்த வாக்கு வங்கி அக்கட்சிக்குச் சாதகமான பலத்தை அளித்தது.
தில்லியில் தெற்கு தில்லி, கிழக்கு தில்லி, மேற்கு தில்லி, வட கிழக்கு தில்லி, புது தில்லி, வடமேற்கு தில்லி, சாந்தினி சௌக் ஆகிய ஏழு மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
இத்தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் வரும் மே 12-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது இந்த ஏழு தொகுதிகளிலும் பாஜக வெற்றி வாகை சூடியது. ஆனால், 2015-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றி பெற்று தில்லியில் ஆட்சி அமைத்தது. பாஜக சொற்ப இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
அதன் பிறகு தில்லியில் பிரதான தேர்தல் ஏதும் நடைபெறாத நிலையில், தற்போது 17-ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஏற்கெனவே தில்லியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஏழு தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்ள பாஜக தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. அதே சமயத்தில், ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் முதல் வெற்றியை ருசிக்க வேண்டும் என்பதில் ஆம் ஆத்மி மிகுந்த ஆர்வம் கொண்டு அதற்கான உத்திகளை வகுத்து வருகிறது.
ஆம் ஆத்மி: தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏழை மக்கள் அதிகம் வாழ்ந்து வரும் அங்கீகாரமற்ற காலனிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இதன் காரணமாகத்தான் அக்கட்சி கடந்த இரு முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது பெரிய அளவிலான வெற்றியைப் பெற முடிந்தது. இதனால், அந்த வாக்கு வங்கியைத் தக்க வைக்கும் முயற்சியில் மொஹல்லா கிளினிக், அங்கீகாரமற்ற காலனிகளில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்டவற்றை அக்கட்சி முன்னெடுத்துள்ளது.
காங்கிரஸ்: தில்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், ஆம் ஆத்மியின் வரவால் தனது வாக்கு வங்கி பலத்தை இழந்தது. மேலும், மக்களிடம் நன்கு பரீட்சயமான ஷீலா தீட்சித்தை தில்லி அரசியல் களத்தில் இருந்து காங்கிரஸ் தலைமை விலக்கி வைத்ததால் அது ஆம் ஆத்மியின் எழுச்சிக்கு மேலும் சாதகமாக அமைந்து விட்டது. இதைக் காலம் கடந்த உணர்ந்த காங்கிரஸ் தலைமை, தற்போது மீண்டும் அவரையே கட்சியின் தில்லி தலைவராக நியமித்து இழந்த செல்வாக்கை பெறுவதில் மும்முரம் காட்டி வருகிறது. மேலும், ஷீலா தீட்சித்தும் கட்சியின் செயல் தலைவர்களுடன் இணைந்து சிறுபான்மையினர், குடிசைப் பகுதிவாழ் மக்களின் வாக்குகளை மீண்டும் பெறுவதற்கான பிரசார வியூகங்களை வகுத்து வருவதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜக: இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், மக்களின் மனப் போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தில்லி குடிசைப் பகுதி மற்றும் அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் மக்களின் வாக்கு வங்கியைப் பெறுவதில் பாஜக தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தொடர்ந்து குடிசைப் பகுதிகளுக்கு சென்று அடிப்படை வசதிகள் மேம்பாடு தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்துப் பேசி வருகிறார்.
இதுதவிர, பிரதமர் நரேந்திர மோடி அரசால் ஏழைகளை மேம்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து குடிசைப் பகுதி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், சிறிய அளவிலான விடியோக்களை தயாரித்து வெளியிடும் நடவடிக்கையில் பாஜகவின் சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த விடியோக்கள் கட்செவி அஞ்சல் மூலம் விரைவில் குடிசைப் பகுதி மக்களுக்குச் சென்றடைய அக்கட்சி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
இதுகுறித்து தில்லி பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், "தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 28 தொகுதிகளில் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள்அதிகம் உள்ளனர். 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு குடிசைப் பகுதிகளில் கணிசமான வாக்குகள் கிடைத்தன. ஆனால், பிரதமர் மோடியின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் குடிசைப் பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது குடிசைப் பகுதி மக்களின் வாக்குகளை பாஜக பெற உதவும். தேர்தலையொட்டி அடுத்த சில நாள்களில் மிகுந்த முனைப்புடன் குடிசைப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளப்படும்' என்றார்.
முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதில் ஆம் ஆத்மி- காங்கிரஸ் போட்டி!
தில்லியில் கடந்த சில தேர்தல்களில் முஸ்லிம் வாக்கு வங்கியை பெறுவதில் ஆம் ஆத்மி கணிசமான அளவு வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வாக்குகள் பாரம்பரியமாக காங்கிரஸ் வசம் இருந்தவை. தில்லி மக்கள் தொகையில் ஏறக்குறைய 12 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். இது காங்கிரஸின் வாக்கு வங்கியாக இருந்து வந்தது. எனினும், 2015 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, முஸ்லிம் வாக்குகளில் பெருபான்மை சதவீதத்தை ஆம் ஆத்மி கட்சி பெற்றது.
2014 மக்களவைத் தேர்தலிலும் இதே நிலை நீடித்தது. இந்நிலையில், தற்போதைய மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை அதிகமான அளவில் பெற வேண்டும் என ஆம் ஆத்மி முனைப்புக் காட்டி வருகிறது. காங்கிரஸும் அந்த வாக்குகளைத் தக்க வைக்க நினைக்கிறது.
இதனால், முஸ்லிம் சமுதாய வாக்குகளைப் பெறுவதில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.