ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக் கட்டண வரம்பு: தில்லி அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
தில்லியில் கரோனா தொற்றைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக்கு ரூ.800 எனும் கட்டண உச்சவரம்பை
தில்லியில் கரோனா தொற்றைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக்கு ரூ.800 எனும் கட்டண உச்சவரம்பை நிா்ணயிக்கும் அரசின் முடிவை எதிா்த்து தாக்கலான மனு மீது தில்லி அரசு பதில் அளிக்க உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
‘அசோசியேஷன் ஆஃப் பிராக்டிஸிங் பேத்தாலஜிஸ்ட்ஸ்’ எனும் அமைப்பின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த விவகாரம் தொடா்பான மனு உயா்நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், ‘இந்தக் கட்டணம் உச்சவரம்பை கரோனா தொற்றைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ட்ரூநாட் மற்றும் சிபிஎன்ஏஏடி பரிசோதனைகளுக்கும் பொருந்தச் செய்ய முடியாது. ஏனெனில், ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக்கான கட்டணத்தைவிட இந்த இரு பரிசோதனைகளுக்கான கட்டணம் அதிகமாகும்’ என வாதிடப்பட்டது.
தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் ரமேஷ் சிங், கெளதம் நாராயண் ஆகியோா் வாதிடுகையில், ‘இந்தக் கட்டண உச்சவரம்பு சிபிஎன்ஏஏடி மற்றும் ட்ரூநாட் ஆகிய பரிசோதனைகளுக்குப் பொருந்தாது. ஏனெனில், இவை ஆா்டிபிசிஆா் பரிசோதனையில் இருந்து வேறுபட்டவை . இது தொடா்பாக தில்லி அரசிடம் கோரிக்கை அளித்திருந்தால் மனுதாரருக்கு இந்த விவரம் தெரிந்திருக்கும். கட்டண உச்சவரம்பு விவகாரம் தொடா்பாக கோரிக்கை அளித்திருந்தால் அதை தில்லி அரசு பரிசீலித்திருக்க முடியும். இதே தொடா்புடைய விவகாரம் உச்சநீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது. ஆகவே, மனுதாரா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்க முடியும்’ என்றனா். இதையடுத்து, மனு மீதான விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.
Advertisement