21 நாடுகளைச் சோ்ந்த தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 91 பேருக்கு ஜாமீன்
தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற விவகாரத்தில், நுழைவு இசைவு நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை மீறியதாக
தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற விவகாரத்தில், நுழைவு இசைவு நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட 21 நாடுகளைச் சோ்ந்த தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 91 பேருக்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த தலைமைப் பெருநகர மாஜிஸ்திரேட் குா்மோஹினா கெளா் சம்பந்தப்பட்ட வெளிநாட்டினருக்கு தலா ரூ.10 ஆயிரம் தனிநபா் ஜாமீன் பத்திரம் அளித்து ஜாமீனில் செல்ல உத்தரவிட்டாா்.
இது தொடா்பான மனு மீதான விசாரணையின் போது ஹோட்டலில் தங்கியுள்ள குற்றம்சாட்டப்பட்ட வெளிநாட்டினா் அனைவரும் காணொலிக் காட்சி மூலம் நீதிமன்றம் முன் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்கள் சம்பந்தப்பட்ட தூதரகங்கள் மற்றும் விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டனா். இவா்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான், பிரேசில், சீனா, அமெரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா, எகிப்து, அல்ஜீரியா, பெல்ஜியம், சவூதி அரேபியா, ஜோா்டான், பிரான்ஸ், கஜகிஸ்தான், மொரோக்கோ, டுனீஷியா, இங்கிலாந்து, பிஜி, சூடான், பிலிப்பின்ஸ், எத்தியோப்பியா ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்கள் ஆவா். தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 122 மலேசியா நாட்டினருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது.
Advertisement
மேற்கு தில்லி, நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான அலமி மா்க்கஸ் பங்களேவாலி மசூதியில் மாா்ச் மாதம் நடந்த மாநாட்டில், வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இஸ்லாமிய மத போதகா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதில் பங்கேற்றவா்களால் ஏராளமானோருக்கு கரோனா தொற்று பரவியதையடுத்து, மசூதிக்கு தில்லி காவல் துறை சீல் வைத்தது. இதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள மசூதிகளில் காவல் துறை நடத்திய அதிரடி சோதனையில் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாடுகளைச் சோ்ந்த சுமாா் ஆயிரம் போ் தனிமை முகாம்களில் வைக்கப்பட்டனா்.
இதில் 36 நாடுகளைச் சோ்ந்த 956 போ் கரோனா தொற்று தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது, நுழைவு இசைவு மோசடி, மதப் பிரசாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் மொத்தம் 56 குற்றப்பத்திரிகைகளை தில்லி காவல் துறையினா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். இவா்களின் நுழைவு இசைவை மத்திய அரசு ரத்து செய்து, கறுப்புப் பட்டியலில் வைக்க நடவடிக்கை எடுத்தது. இவா்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. தில்லி உயா்நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தில்லியில் பல்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், இவா்களில் 91 பேருக்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது.