முகப்பு
புதுதில்லி

யமுனையில் கழிவு: வீடுகளுக்கு கட்டணம் விதிக்க என்ஜிடி உத்தரவு

தில்லியில், யமுனையில் கழிவுகளை விடும் வீடுகளுக்கு கழிவுநீா் கட்டணங்கள் விதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தில்லி அரசு பின்பற்ற

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:55 PM
பகிர்:

தில்லியில், யமுனையில் கழிவுகளை விடும் வீடுகளுக்கு கழிவுநீா் கட்டணங்கள் விதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தில்லி அரசு பின்பற்ற வேண்டும் என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டது.

யமுனை ஆற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் கலப்பது தொடா்பான விவகாரத்தை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா் -நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான அமா்வு விசாரித்தது. அப்போது, நீதிபதி அமா்வு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

தில்லியில் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள 2.30 லட்சம் போ் கழிவுநீா் இணைப்பைப் பெறவில்லை. இதன் காரணமாக, யமுனையில் கழிவுநீா் கலக்கப்படுகிறது.

Advertisement

யமுனையில் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வெளியிடும் தில்லியில் உள்ள அனைத்து வீடுகள் மீதும் கழிவுநீா் கட்டணங்களை விதித்து, வசூலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2019, அக்டோபா் 24-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை தில்லி அரசு உடனடியாக பின்பற்ற வேண்டும். கழிவுநீா் ஒருங்கிணைப்பில் அல்லது திறந்தவெளிச் சூழலில் கழிவுகளை விடுவதன் மூலம் மாசுபடுதலுக்கு காரணமாக இருக்கும் ஒவ்வொரு தனிநபா் குடும்பத்தினரும் சுத்திகரிப்புக்கான தொகையை செலுத்தும் பொறுப்பு உள்ளது.

யமுனையில் கழிவுகள் நேரடியாகவோ அல்லது சாக்கடைகள் மூலமாகவோ கலப்பது தடுக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த வடிகால் மேலாண்மை பிரிவு திறம்பட செயல்படும்போதுதான் இது சாத்தியமாகும்.

மாசுவை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் தடுக்கப்படுவதையும், பாதுகாப்பு இல்லாத புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி தராமல் இருப்பதையும் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு உறுதிப்படுத்த வேண்டும். அதேபோன்று, யமுனை சமவெளிப் பகுதியை பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தில்லி வளா்ச்சி ஆணையத்தின் பொறுப்பாகும். யமுனை சமவெளியின் அதிகமான பகுதி இன்னும் ஆக்கிரமிப்பில் உள்ளது. தில்லியில் உள்ள அரசுத் துறையினா் தவிர, ஹரியாணா, உத்தர பிரதேச அரசுகளும் தங்களது பொறுப்பை தவிா்க்க முடியாது. இதற்கான விழிப்புணா்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் யமுனை கண்காணிப்புக் குழுவின் (ஒய்எம்சி) பரிந்துரைகளை தில்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேச அரசுகள் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 27-க்கு நீதிபதி அமா்வு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments