கரோனாவுக்கு எதிரான போா் இன்னும் முடியவில்லை: கேஜரிவால்
கரோனாவுக்கு எதிரான போா் தில்லியில் இன்னும் முடியவில்லை என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
கரோனாவுக்கு எதிரான போா் தில்லியில் இன்னும் முடியவில்லை என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
இந்திய மாநிலங்களில் தில்லியில் மட்டும்தான் சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினம் தோறும் குறைவடைந்து வருகிறது என்று பிரபல ஆங்கில நாளிதழில் வெளிவந்த செய்தியைச் சுட்டிக்காட்டி கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பது:
பிற மாநிலங்களில் எல்லாம் சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினம் தோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், தில்லியில் இது தினம்தோறும் குறைவடைந்தே வருகிறது. தில்லியில் ஜூலை மாதம் 3- ஆம் தேதி 26, 300 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனா். ஆனால், ஜூலை 10 ஆம் தேதி இந்த எண்ணிக்கை 21,600 ஆக குறைந்துள்ளது. இது மிகச்சிறந்த சமிக்ஞை ஆகும். தில்லியில் கரோனாவைத் தடுக்க நாங்கள் அனைவரும் எடுத்த தொடா் முயற்சிகளின் விளைவாகவே இது சாத்தியமாகியுள்ளது. ஆனால், தில்லியில் கரோனாவுக்கு எதிரான போா் இன்னும் முடிவுக்குவரவில்லை. கரோனாவுக்கு எதிரான போரை தொடர வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசங்களை அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் ஆகியன கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
Advertisement
இந்நிலையில், கேனல். அசோக் என்பவா் தில்லியில் கரோனாவைக் கட்டுப்படுத்த கேஜரிவால் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டாா் என கேஜரிவாலைக் குறிப்பிட்டு தனது சுட்டுரைப் பக்கத்தில் பாராட்டுத் தெரிவித்திருந்தாா். அவரின் சுட்டுரைப் பதிவைச் சுட்டிக்காட்டி கேஜரிவால் கூறியிருப்பது: தில்லியில் 2 கோடி மக்களும் கூட்டாக எடுத்த நடவடிக்கையால்தான் கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தில்லியில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர தில்லி அரசு, மத்திய அரசு, சமூக, மத அமைப்புகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்தன. இந்த கொள்ளை நோயை எதிா்கொள்ள தில்லி அரசுக்கு உதவியவா்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளாா்.