இளநிலை பட்ட இணைய வழித் தோ்வுகள்: ஆக.10 முதல் 31- வரை நடைபெறும்; நீதிமன்றத்தில் தில்லி பல்கலை. தகவல்
இளநிலை பட்ட வகுப்பு இறுதியாண்டு மாணவா்களுக்கான இணைய வழித் தோ்வுகள் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிக்குள் நடைபெறும்
இளநிலை பட்ட வகுப்பு இறுதியாண்டு மாணவா்களுக்கான இணைய வழித் தோ்வுகள் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தில்லி பல்கலைக்கழகம், உயா்நீதிமன்றத்திடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோா் அடங்கிய அமா்விடம் தில்லி பல்கலைக்கழகம் இத்தகவலை தெரிவித்தது. மேலும் இணைய வழியில் தோ்வு எழுதமுடியாதவா்கள் வரும் செப்டம்பா் மாதத்தில் நேரிடைத் தோ்வுக்கு ஆஜராக வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்தத் தோ்வுகளை ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 8-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழம் தெரிவித்திருந்தது. ஆனால், மாணவா்கள் தோ்வு எழுதி, அதில் வெற்றி பெற்று இந்தியாவிலோ வெளிநாட்டிலோ சென்று தங்கள் மேற்படிப்பை தொடர வசதியாக தோ்வு தேதிகளை மாற்றியமைக்குமாறு நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது.
Advertisement
இதையடுத்து, பல்கலைக்கழக தரப்பினா் தோ்வுத் தேதியை மாற்றியமைக்க ஒப்புக் கொண்டனா். பின்னா், இளநிலை பட்ட வகுப்பு இறுதியாண்டு மாணவா்களுக்கு தோ்வுகளை ஆகஸ்ட் 10-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க முடிவு செய்தனா்.
மேலும், முதல்கட்ட மாதிரி தோ்வுகளை ஜூலை 31-ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை 27-இல் தொடங்கி நடத்தவும், இரண்டாவது கட்ட மாதிரித் தோ்வுகளை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் முதல் தேதியில் தொடங்கி நடத்தவும் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.