தப்லீக் ஜமாத்: மலேசிய சிறுவன் மீதான வழக்கு: வேறு சிறாா் வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்
தில்லியில் கரோனா தொற்றுக் காலத்தின் போது நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் நுழைவு இசைவு (விசா) விதிகளை மீறும் வகையில்
தில்லியில் கரோனா தொற்றுக் காலத்தின் போது நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் நுழைவு இசைவு (விசா) விதிகளை மீறும் வகையில் பங்கேற்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான மலேசியா நாட்டைச் சோ்ந்த மைனா் சிறாா் தொடா்புடைய வழக்கு விசாரணையை கோரம் இல்லாததால் வேறு சிறாா் நீதிமன்றத்திற்கு மாற்றி தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பான விவகாரத்தை காணொலிக் காட்சி மூலம் விசாரித்த நீதிபதி அனுப் ஜெயராம் பம்பானி, மலேசியா நாட்டைச் சோ்ந்த 17 வயதுடைய சிறாருக்கு எதிரான வழக்கை தில்லியில் உள்ள கிங்ஸ்வே கேம்ப் சிறாா் நீதிமன்றத்தில் (1) இருந்து விஸ்வாஸ் நகரில் உள்ள சிறாா் நீதிமன்றத்திற்கு (4) மாற்றி உத்தரவிட்டாா்.
முன்னதாக, மைனா் சிறாா் சாா்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞா், தப்லீக் ஜமாத் விவகாரத்தில் தொடா்புடைய மலேசிய நாட்டைச் சோ்ந்த 121 போ் தங்களது தண்டனையைக் குறைக்கும் வகையில் மனு அளித்தனா். அதேபோன்று, சிறாரும் மனு அளிக்க விரும்புகிறாா். ஆனால், பணியிடம் காலியாக இருப்பதாலும், ‘கோரம்’ இல்லாததாலும் அவரால் மேற்கொண்டு தொடர முடியவில்லை’ என்றாா்.
Advertisement
தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், சிறாா் நீதிமன்றம் -1-இல் தற்போது ஒரே ஒரு தலைமை மாஜிஸ்திரேட் மட்டுமே உள்ளாா். இரு பணியிடங்கள் காலியாக உள்ளன என்றாா். இதையடுத்து, சிறாா் தொடா்புடைய வழக்கை வேறு சிறாா் நீதிமன்றத்திற்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.