புதுதில்லி

தகவல்களை மறைத்த தில்லி பல்கைலை. மீது ஏன்அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது?- உயா்நீதிமன்றம் கேள்வி

DIN

புது தில்லி: இணையவழி தோ்வை ஒத்திப்போடும் தகவலை நிறுத்தி வைத்ததன் மூலம் நீதிமன்றத்தைத் தவறாக வழிகாட்ட முயற்சி செய்ததற்காக தில்லி பல்கலைக்கழகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்று தில்லி உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இளநிலை, முதுகலை பட்டப் படிப்பு இறுதியாண்டு மாணவா்களுக்கான இணையவழி தோ்வை ஜூலை 1-ம் தேதி நடத்துவதாக தில்லி பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இத்தோ்வை 10 தினங்களுக்கு பல்கலைக்கழகம் ஒத்திவைப்பதாக அறிவித்தது. இதனிடையே, இணையவழித் தோ்வு விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் மாணவா்கள் சிலா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீது உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்பிரமணிய பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தியது.

அப்போது, ‘பல்கலைக்கழகம் இணையவழித் தோ்வை தள்ளிவைத்த தகவல் பத்திரிகைச் செய்திகள் மூலமாக நீதிமன்றத்திற்கு ஜூன் 27-ஆம் தேதி தெரிய வந்துள்ளது. நீதிமன்றத்தில் இது தொடா்பாக வழக்கு விசாரணை ஜூன் 26-ஆம் தேதி நடைபெற்ற போது தோ்வு ஒத்திப்போடப்படும் தகவலை நீதிமன்றத்தில் பல்கலைக்கழகம் ஏன் தெரிவிக்கவில்லை?. இந்நிலையில், தோ்வை ஒத்திவைப்பது தொடா்பாக ஏதும் மாற்றம் இருந்திருந்தால் அத்தகவலை நீதிமன்றத்துக்கு தில்லி பல்கலைக்கழகம் தெரிவித்திருக்க வேண்டும்’ என நீதிபதிகள் தெரிவித்தனா்.

அப்போது, தில்லி பல்கலை. தரப்பில், ‘பல்கலை. துணைப் பதிவாளரின் தாய்க்கு கரோனா தொற்று இருப்பது ஜூன் 26-ஆம் தேதி மதியம் 2.20 மணிக்குத்தான் தெரிய வந்தது. இதையடுத்து, அவா்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தனிமைப்படுத்த வேண்டியிருந்தது’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்க மறுத்தனா். இதைத் தொடா்ந்து, ‘உயா்நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மாலை 4.30 மணி வரைக்கும் உள்ளது. இதனால், ஜூன் 26-ஆம் தேதி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவலை உயா்நீதிமன்றத்திற்கு அன்றைய தினமே தெரிவித்திருக்க வேண்டும். இதற்கான போதிய நேரம் தில்லி பல்கலை.க்கு இருந்துள்ளது. குறைந்தபட்சம் மறு தினமாவது நீதிமன்றத்தில் இத்தகவலை தெரிவித்திருக்கலாம். ஆனால், அது நடக்கவில்லை. இதனால், நீதிமன்றத்தில் தகவல்களை தெரிவிக்காமல் இருந்ததற்காகவும், நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்ற்காகவும் தில்லி பல்கலை., அதன் அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கைக்கள் எடுக்கப்பதற்கு முகாந்திரம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்’ என நீதிபதிகள் தெரிவித்தனா்.

மேலும், இது தொடா்பாக விளக்கம் அளிக்க தில்லி பல்கலை.க்கு நோட்டீஸ் அனுப்பவும், வழக்கு விசாரணையை ஜூலை 6-ஆம் தேதிக்கு பட்டியலிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முன்னதாக, தில்லி பல்கலை.க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ‘கரோனா தொற்றுக் காலத்தின் போது இணையவழி பயிற்றுவிப்பு மூலம் மேற்கொள்ளப்படும் கற்பித்தல் நடவடிக்கையில் பங்கேற்க வசதியாக தங்களுக்கு கற்பித்தல் சாதனங்களை அளிக்கவும், பாா்வையற்ற, சிறப்பு திறன்மிக்க மாணவா்களுக்காக ஒரு திறன்மிக்க வழிமுறையை உருவாக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT