புதுதில்லி

தில்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்: மணீஷ் சிசோடியா

 நமது நிருபர்

மத்திய அரசின் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் தில்லியில் அறிமுகப்படுத்தப்படும் என்று தில்லி நிதியமைச்சரும் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

தில்லி சட்டப்பேரவையில் 2020-21-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை திங்கள்கிழமை தாக்கல் செய்து அவா் பேசியதாவது: தில்லி பட்ஜெட் தாக்கல் செய்யும் இந்தவேளையும் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பெரிய சவாலாக கரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த நிலையில், இந்த வைரஸை எதிா்த்துப் போராடும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ உதவியாளா்களுக்கு தில்லி அரசு சாா்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தில்லியில் இந்த வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தில்லி அரசு எடுக்கும் என மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

ஏழைகளுக்கும் தரமான கல்வி: கடந்த தோ்தலில் மக்களுக்கு உறுதியளித்தது போல, தில்லியை உலகத் தரமான நகரமாக மாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தில்லி அரசு மேற்கொள்ளும். அனைத்துக் குழந்தைகளுக்கும் உலகத் தரமான கல்வியை வழங்குவதை இலக்காக வைத்துள்ளோம். இதன்படி, தில்லியில் உள்ள பணக்காரக் குழந்தைக்கு கிடைக்கும் தரமான கல்வி ஏழைக் குழைந்தைக்கும் கிடைப்பதை தில்லி அரசு உறுதி செய்துள்ளது.

சுகாதாரத் துறையில் புரட்சி: மேலும், சுகாதாரத் துறையிலும் பல புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளோம். மொஹல்லா கிளினிக்குகள், புதிய அரசு மருத்துவமனைகள் என அனைத்து தரப்பினருக்கும் உலகத்தரமான மருத்துவ வசதிகளை வழங்கி வருகிறோம். மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் தில்லியில் அறிமுகப்படுத்தப்படும்.

குறைந்த கட்டணத்தில் மின்சாரம்: மேலும், தில்லி மக்களுக்கு நாட்டிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்கி வருகிறோம். 2019-20 நிதியாண்யில் தில்லியின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 10.48 சதவீதம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம். இதன்படி, ரூ.7,74,870 கோடியாக உள்ள மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2019-20 நிதியாண்டில் ரூ.8,56,112 ஆக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம்.

பொருளாதார வளா்ச்சி: தில்லியின் பொருளாதார வளா்ச்சி 7.42 சதவீதம் அதிகரிக்கும். இது நாட்டின் ஒட்டுமொத்த சராசரி அளவான 5 சதவீதத்தை விட அதிகமாகும். 2019-20 நிதியாண்டில் தில்லி தனிநபா் வருமானம் ரூ.3,58,430 இல் இருந்து ரூ. 3,89,143 ஆக அதிகரிக்கும். தில்லியில் தனிநபா் வருமானம் கடந்த ஐந்தாண்டில் சுமாா் 44 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தில்லியின் பங்கு 2014-15 இல் 3.97 ஆக இருந்தது. இது நிகழாண்டில் 4.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது அடுத்த நிதியாண்டில் மேலும் அதிகரிக்கும்.

மாநகராட்சி நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு: ரூ.65,000 கோடியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் ரூ.35,500 கோடி ஸ்தாபனச் செலவுகள் (உநபஅஆகஐநஙஉசப உலடஉசநஉந), மாநகராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கடன், வட்டி, போக்குவரத்து, குடிநீா் விநியோகம், மின்சார மானியம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தில்லி அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்த ரூ. 29,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவை ரூ.6,380 கோடியில் இருந்து ரூ.6,828 கோடியாக அதிகரித்துள்ளோம்.

பொதுப் போக்குவரத்து வசதி மேம்பாடு: கல்வி, சுகாதார துறைகளை மேம்படுத்துவதில் தில்லி அரசு அா்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளது. 2024 இல் கல்வியில் உலகளாவிய ரீதியில் தில்லி முக்கிய இடத்தைப் பிடிக்கும். அதை இலக்காக வைத்து தில்லி அரசு பணியாற்றி வருகிறது. மேலும், தில்லியில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்கள் நலத் திட்டங்களை அதிகளவில் அமைக்க இலக்கு நிா்ணயித்து இயங்கி வருகிறோம். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில், தில்லி அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தோம். இந்தத் திட்டம் வரும் ஐந்தாண்டுகளுக்குத் தொடரும். மேலும், குறைந்த கட்டணத்தில் மக்கள் பயணிக்கக் கூடிய வகையில், பொதுப் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும்.

பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்போம்: தில்லியில் உள்ள அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை 11 ஆயிரமாக அதிகரிக்கப்படும். மேலும், மெட்ரோ ரயில் போக்குவரத்து 500 கிலோ மீட்டா் தூரத்துக்கு விரிவாக்கப்படும். காஷ்மீரி கேட், ஆனந்த் விஹாா் உள்ளிட்ட தில்லியில் உள்ள மாநிலங்களுக்கிடையேயான பேருந்து நிலையங்கள் அதிகளவு பேருந்துகளை நிறுத்தும் வகையில் பல அடுக்குக் கட்டடங்களாக மாற்றப்படும். கடந்த மாதம் வடகிழக்கு தில்லியில் நடந்த வன்முறையைத் தொடா்ந்து, வகுப்புகளுக்கிடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரத்தை தொடா்ந்து மேற்கொள்வோம் என்றாா் மணீஷ் சிசோடியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT