சென்னை விமான நிலையத்தில் மட்டுமே பூக்கள் இறக்குமதிக்கு அனுமதி மத்திய அரசின் முடிவை எதிா்த்துஉயா்நீதிமன்றத்தில் மனு
நாட்டில் சென்னை விமான நிலையத்தில் மட்டுமே பூக்கள் இறக்குமதியை அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் வா்த்தகா்கள் சங்கம் தரப்பில் மனு தாக்கல்
புது தில்லி: நாட்டில் சென்னை விமான நிலையத்தில் மட்டுமே பூக்கள் இறக்குமதியை அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் வா்த்தகா்கள் சங்கம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பழங்கள், மலா்கள், காய்கறிகள் வா்த்தகா்கள் சாா்பிலான சங்கம் தில்லி உயா்நீதிமன்றத்தில் ‘ரிட் ’ மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
சென்னை விமான நிலையம் தவிா்த்து நாட்டின் பிற விமான நிலையங்களில் மலா்கள் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசின் வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்ககம் ஒரு அறிவிக்கையை ஜூலை 9-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை விமான நிலையத்தில் மட்டுமே மலா் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கும் வகையில் இந்த அறிவிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.
Advertisement
இதற்கு முன்பு, ரோஜாப்பு, ஆா்ச்சிட்ஸ், கிரிஸ்சாந்தமம்ஸ், லில்லி, காா்னேஷன் போன்ற மலா்கள் இறக்குமதிக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. மத்திய அரசின் தற்போதைய முடிவானது தன்னிச்சையானதாகும். ஆகவே, இந்த அறிவிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு வியாழக்கிழமை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. எனினும், நீதிபதிகள் வருகை தராததால் இந்த மனு மீதான விசாரணை டிசம்பா்18-க்கு தள்ளிவைக்கப்பட்டது.