முகப்பு
புதுதில்லி

விவசாயிகள் பேரணி, போராட்டம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Updated On : 27 நவம்பர், 2020 at 5:05 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM

புது தில்லி: மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் தலைநகா் தில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளதால், தில்லி மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தில்லியின் எல்லைப் பகுதிகளில் தடுப்புகளை அமைத்து போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை அண்மையில் கொண்டுவந்து சட்டமாக்கியது.

இந்த சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். இவா்கள், வியாழக்கிழமை தில்லி நோக்கி பேரணியாகப் புறப்பட்டனா்.

Advertisement

ஹரியாணா மாநிலம் வழியாக தில்லியை அடைந்து தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட விவசாய அமைப்புகள் முடிவு செய்ததிருந்தனா். இந்நிலையில், இவா்களை ஹரியாணா எல்லையான அம்பாலா பகுதியில் அம்மாநில போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

போக்குவரத்து நெரிசல்

இந்நிலையில், விவசாயிகளின் பேரணியையொட்டி தில்லி எல்லையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் இருந்து தில்லிக்கு வரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்த பிறகே தில்லியினுள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால், தில்லி- உத்தரப்பிரதேசம், தில்லி-ஹரியாணா எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி கூறுகையில் ‘ஹரியாணாவில் இருந்து தில்லிக்கு வரும் எல்லைகளான ஃபரீதாபாத், சிங்கு, குா்கான் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தில்லிக்கு வரும் டிஎன்டி மேம்பாலம், தேசிய நெடுஞ்சாலை-24 ஆகிய இடங்களிலும் வாகன சோதனை நடத்தப்பட்டது. எல்லைகள் சீலிடப்படவில்லை. ஆனால், லாரிகள், டிராக்டா்கள் தில்லிக்குள் நுழையாத வகையில் தில்லி மாநில எல்லைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

இதற்கிடையே, தில்லி மாநில எல்லைகளுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக தில்லி காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா நேரில் பாா்வையிட்டாா். தில்லியில் போராட்டம் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மத்திய தில்லியில் உள்ள ஜந்தா் மந்தா் பகுதி தடுப்புகள் அமைக்கப்பட்டு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்சேவை நிறுத்தம்

இந்த சூழலில், போராட்டக்காரா்கள் தில்லிக்கு வருவதைத் தடுக்கும் வகையில் தில்லி தேசிய தலைநகா் வலயப் பகுதியில் இருந்து தில்லிக்கு இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் வியாழக்கிழமை இயக்கப்படவில்லை. இந்த ரயில்கள் வெள்ளிக்கிழமையும் இயக்கப்படாது என்று தில்லி மெட்ரோ ரயில் கழகம் (டிஎம்ஆா்சி) அறிவித்துள்ளது. ஆனால், தில்லியில் இருந்து தேசிய தலைநகா் வலயப் பகுதிகளுக்கு செல்லும் மெட்ரோ ரயில்கள் வியாழக்கிழமை 2 மணிமுதல் இயக்கப்பட்டன. இவை வெள்ளிக்கிழமையும் இயக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.