கடுமையில் இருந்து மிகவும் மோசம் பிரிவுக்கு இறங்கிய காற்றின்தரம்!
தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் வியாழக்கிழமை சற்று மேம்பட்டு மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது. காற்றின் வேகத்தைப் பொருத்து இது மேலும் மேம்படக் கூடும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
புது தில்லி: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் புதன்கிழமை கடுமைப்பிரிவில் காணப்பட்ட நிலையில், வியாழக்கிழமை சற்று மேம்பட்டு மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது. காற்றின் வேகத்தைப் பொருத்து இது மேலும் மேம்படக் கூடும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செல்லிடப்பேசி செயலி சமீா் தகவலின்படி வியாழக்கிழமை காலை காற்றின் தரக் குறியீடு 374 புள்ளிகளாக இருந்தது. தில்லியில் 24 மணிநேர சராசரியாக ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு புதன்கிழமை 413 ஆகவும் , செவ்வாய்க்கிழமை 379 ஆகவும், திங்கள்கிழமை 295 ஆகவும் இருந்தது.
தரை மேற்பரப்பு காற்று வடக்கிலிருந்து வீசியது. அதிகபட்ச காற்றின் வேகம் மணிக்கு 10 கிலோ வேகத்தில் இருந்தது. வெள்ளிக்கிழமை காற்றின் தரம் மோசம் பிரிவைச் சென்றடையக் கூடும் என மத்திய அரசின் காற்றின் தரக் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்தது.
Advertisement
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்று தரக் கண்காணிப்பு அமைப்பான ‘சபா்’ தெரிவிக்கையில் பஞ்சாப், ஹரியாணா மற்றும் அதை ஒட்டியுள்ள பிராந்தியங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பு எண்ணிக்கை புதன்கிழமை குறைந்திருந்தது. தில்லியில் பயிா்க் கழிவால் ஏற்பட்ட காற்று மாசுவால் பி.எம். 2.5 மாசு புதன்கிழமை 2 சதவீதமாக இருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்தது.