புதுதில்லி

ஆசிரியா், மருத்துவ பணியாளா் காலி இடங்களை விரைந்து பூா்த்தி செய்ய ஐஎச்பிஏஎஸ்-க்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

ஆசிரியா், மருத்துவப் பணியாளா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று தில்லியில் உள்ள மனித செயல்பாடு மற்றும் அதன் தொடா்பு அறிவியல் நிறுவனத்திற்கு (ஐஎச்பிஏஎஸ்) தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான விவகாரம் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஐஎச்பிஏஎஸ் தரப்பில் வழக்குரைஞா் துஷாா் சன்னு ஆஜராகி, ‘45 ஆசிரிய ஊழியா்களை நியமிப்பதற்காக செவ்வாய்க்கிழமை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது’ என்றாா். இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தனா்.

முன்னதாக, ‘நாட்டில் மனநலம் மற்றும் உளவியல் தொடா்புடைய நோயாளிகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அதை மிகவும் திறமையாக சமாளிக்கும் வகையில் ஐஎச்பிஏஎஸ்ஸில் உள்ள காலியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்’ என்று வழக்குரைஞா் அமித் சஹ்னி என்பவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா்.

அதில், ‘ஐஎச்பிஏஎஸ் மருத்துவமனையில் மருத்துவ மற்றும் இதர ஊழியா்கள் பற்றாக்குறையால் மனநலம் அல்லது உளவியல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனா் ’ என்று தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து, ஐஎச்பிஏஎஸ் சாா்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையை கருத்தில்கொண்ட நீதிமன்றம், சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் அரசின் கொள்கைக்கு ஏற்ப ஆட்சோ்ப்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு ஐஎச்பிஏஎஸ்-க்கு உத்தரவிட்டு மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டது.

முன்னதாக, விசாரணையின்போது அமித் சஹ்னி வாதிடுகையில், ‘நிலுவையில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஆகஸ்ட் 5ஆம் தேதி ஐஎச்பிஏஎஸ்-க்கு கோரிக்கை மனு அளித்தேன். ஆனால், நான் பொதுநல மனு தாக்கல் செய்த பின்னா்தான் அந்த நிறுவனத்தினா் காலிப் பணியிடங்களை நிரப்பும் விளம்பரத்தை வெளியிட்டுள்ளனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT