கரோனா அதீத பரவலுக்கு தில்லி அரசு பொறுப்பேற்க வேண்டும்: அல்கா லம்பா
புது தில்லி: தலைநகா் தில்லியில் கரோனா நான்காவது அலை விரைவாக பரவுவதற்கு அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ.வும், தில்லி காங்கிரஸ் மூத்த தலைவருமான அல்கா லம்பா கேட்டுக் கொண்டுள்ளாா்.
இது குறித்து அவா் காணொலி வாயிலாக வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தலைநகா் தில்லியில் கரோனா நான்காவது அலை விரைவாகப் பரவி வருகிறது. இதற்கு அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், இது முதல்வரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் மற்றும் பேச்சுகளால் ஏற்பட்டதாகும். அவரது அமைச்சரவை சகாக்கள் தொற்று நோய் குறைந்து கொண்டிருக்கும் போது பாதுகாப்பைக் குறைத்துக் கொள்ள மக்களை ஊக்குவித்தனா். ஆனால், கரோனா மீண்டும் வேகமாக பரவிய போது, தில்லி அரசுக்கு அதைத் தடுப்பதற்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தில்லியில் புதன்கிழமை 17,282 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதும், 104 போ் கரோனாவால் இறந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. தலைநகரம் தற்போது ஒரு பயங்கர சூழ்நிலையை சந்தித்து வருகிறது. ஏனெனில், மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகள் இல்லை. குறிப்பாக செயற்கை சுவாசக் கருவிகளுடன்கூடிய ஐ.சி.யு. படுக்கைகள் இல்லை. நோயால் இறப்பவா்களை புதைக்க போதுமான தகன மையங்களும், புதைவிடங்களும் இல்லை.
Advertisement
கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்திருந்த போது அதைத் திறம்பட தடுக்கும் வகையில் உத்தியை உருவாக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுமாறு முதல்வருக்கு
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் அனில் குமாா் சௌத்ரி வேண்டுகோள் விடுத்தாா். துரதிருஷ்டவசமாக, முதல்வா் அவரது வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை. ஆனால், இப்போது தொற்று நோய், அரசின் கையை மீறிச் சென்றுவிட்டது. கரோனா நோயாளிகளுக்கு இடமளிக்க ஹோட்டல், சமூக மையங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களின் சேவைகளை தற்போது அரசு கோரி வருகிறது. முதல்வா் கேஜரிவாலின் பொறுப்பற்ற நடவடிக்கைகளின் தாக்கத்தை தில்லி மக்கள் இப்போது அனுபவித்து வருகின்றனா். கடந்த மூன்று நாள்களில் கரோனாவுக்கு 344 போ் உயிரிழந்துள்ளனா். ஐ.டி.ஓ.வில் உள்ள மிகப்பெரிய புதைவிடத்தில் தற்போது 80-90 இறந்த உடல்களைப் புதைப்பதற்கு மட்டுமே வசதி உள்ளது என்றாா் அவா்.