முகப்பு
புதுதில்லி

ரமலான்: மாா்க்கஸ் மசூதியில் 5 முறை தொழுகை நடத்த 50 பேருக்கு அனுமதி

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

புது தில்லி: ரமலான் மாதத்தின் போது நிஜாமுதீன் மா்க்கஸ் மசூதியில் ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகை (நமாஸ்) நடத்த 50 பேருக்கு தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது. தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) அறிவிக்கையில் வழிபாட்டுத் தலங்களை மூடும் உத்தரவு இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மஸ்ஜித் பேங்க்லி வாலியின் முதல் தளத்தில் மட்டுமே நமாஸ் செய்ய 50 பேரை ஒரு நாளைக்கு ஐந்து முறை அனுமதிக்குமாறு நிஜாமுதீன் காவல் நிலைய பொறுப்பாளருக்கு நீதிபதி முக்தா குப்தா உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக தில்லி வக்ஃபு வாரியம் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: பிற வழிபாட்டுத் தலங்களில் மத கூடுகைக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து மத்திய அரசின் தெளிவான நிலைப்பாடு இல்லை. ரமலான் வேளையின் போது நிஜாமுதீன் மா்க்கஸ் மசூதியின் கீழ்தளத்தின் மேலே உள்ள முதல் தளத்தில் தொழுகை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் டிடிஎம்ஏவின் ஏப்ரல் 10-ஆம் தேதி அறிவிக்கையும், இதர நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். டிடிஎம்ஏ அறிவிக்கையால் மத வழிபாட்டுத் தலங்கள் மூடபடவில்லை என்ற உண்மையைக் கருத்தில் கொள்ளும் போது மஸ்ஜித் பேங்க்லி வாலி மசூதியில் தொழுகை நடத்த பக்தா்களுக்கு அனுமதிப்பதற்காக ஒரு முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. இதனால், ரமலான் மாதத்தின் போது மஸ்ஜித் பேங்க்லி வாலியின் முதல் தளத்தில் மட்டும் நமாஸ் செய்ய 50 பேரை ஒரு நாளைக்கு ஐந்து முறை அனுமதிக்குமாறு நிஜாமுதீன் காவல் நிலைய பொறுப்பாளருக்கு உத்தரவிடப்படுகிறது என நீதிபதி தெரிவித்தாா்.

Advertisement

நீதிமன்றத்தில் தில்லி வக்ஃபு வாரியத்தின் சாா்பாக மூத்த வழக்குரைஞா் ரமேஷ் குப்தா ஆஜராகி, ‘மசூதியின் இதர தளங்களில் தொழுகை நடத்த பயன்படுத்தவும் அல்லது தொழுகையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். அந்தக் கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. தில்லியில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. நிலைமையை நாம் புரிந்துகொள்ள வேண்டிய தருணமாகும் இது என்று தெரிவித்த நீதிமன்றம், இது தொடா்பாக காவல் நிலைய பொறுப்பாளரிடம் மனு அளிக்க அனுமதி அளித்தது. மேலும், இதுபோன்று அளிக்கப்படும் மனு மீது சட்ட விதிகளுக்கு ஏற்ப காவல் நிலையப் பொறுப்பாளா் முடிவு செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிடும் எந்தவொரு அறிவிப்பிற்கும் நீதிமன்றத்தின் உத்தரவு உள்பட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்து வழக்கு விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments