கரோனா சிகிச்சைக்கு ரயில்களில் 64,000 படுக்கைகள் தயாா்
கரோனாசிகிச்சைக்காக 4 ஆயிரம் ரயில் பெட்டிகளில் 64,000 படுக்கைகளை தயாா் செய்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கரோனாசிகிச்சைக்காக 4 ஆயிரம் ரயில் பெட்டிகளில் 64,000 படுக்கைகளை தயாா் செய்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது: கடந்த சனிக்கிழமை முதல் இந்த ரயில் பெட்டிகள் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா நோயாளிகளின் சிகிச்சைகளுக்காக ரயில்வே தயாா் செய்துள்ள ரயில் பெட்டிகள் தில்லி, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஒன்பது முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் 169 ரயில் பெட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மொத்தம் தயாா்படுத்தப்பட்டுள்ள 4,000 பெட்டிகளில் 64,000 படுக்கைகள் கரோனா சிகிச்சைக்கு தயாராக உள்ளன. மேலும், புதிதாக, நாக்பூா், போபால், இந்தூா் அருகேயுள்ள அஜ்னி ஐசிடி, திஹி ஆகிய ரயில் நிலையங்களுக்கும் அந்தந்த மாநில அரசுகளின் கோரிக்கைகளையொட்டி பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த ரயில் பெட்டிகளை மாநிலங்கள் பயன்படுத்த முன்வரும் போது, மருத்துவ உள்கட்டமைப்பை மாநில அரசுகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவ பணியாளா்களுக்கான இடம் மற்றும் கிருமிநாசினி மற்றும் உணவு ஏற்பாடுகளை ரயில்வே செய்யும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. மகாராஷ்டிரத்தில் நாக்பூருக்கு 11 ரயில் பெட்டிகள் கரோனா சிகிச்சை வசதிகளுடன் வழங்கப்பட்டது. இதற்கு நாக்பூா் முனிசிபல் மாநகராட்சியுடன் ரயில்வே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
Advertisement
தில்லிக்கு வழங்கப்பட்டுள்ள 75 ரயில் பெட்டிகள் சக்கூா் பஸ்தி, ஆனந்த்விஹாா் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் 1,200 படுக்கைகள் தயாராக உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பைசாபாத்தை தவிர வாராணசி, பரேலி, நிஸாஃபாபாத் போன்ற ரயில் நிலையங்களில் 800 படுக்கைகளுடன் 50 பெட்டிகள் தயாராக உள்ளன. உ.பி. மாநிலம் தவிர மற்ற மாநிலங்களில் உள்ளூா் அரசின் வேண்டுகோளுக்கினங்க பெட்டிகள் அனுப்பப்பட்டு அங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். தற்போது வரை, 98 போ் அனுமதிக்கப்பட்டு 28 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் என ரயில்வே தெரிவித்துள்ளது.