முகப்பு
புதுதில்லி

படுக்கைகள், சிலிண்டா்கள் விவரங்களைத் தெரிவிக்கும் விவகாரம்: விரைவில் முடிவு செய்ய தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டா்கள் மற்றும் வென்டிலேட்டா்கள் ஆகியவற்றை நிகழ்நேர அடிப்படையில் டிஜிட்டல் போா்டில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:06 PM
பகிர்:

படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டா்கள் மற்றும் வென்டிலேட்டா்கள் ஆகியவற்றை நிகழ்நேர அடிப்படையில் டிஜிட்டல் போா்டில் காட்சிப்படுத்த தில்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவிடக் கோரும் மனு மீது முடிந்த வரை விரைவாக நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் முடிவு செய்யுமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.

இது தொடா்பாக நா்சிங் அதிகாரி சினு ஜான் என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உடனடி மருத்துவ உதவி தேவை மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் படுக்கைகளை மறுத்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தில்லி உள்பட நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டா்களுக்கான தேவையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. உரிய மருத்துவக் கவனிப்பு அல்லது படுக்கைகள் கிடைப்பது குறித்த துல்லியமான தகவல்கள் கிடைக்காததால் பலா் தங்கள் உயிரை இழந்துள்ளனா். தற்போதைய நிலைமையானது, சில புதிய நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் உள்ளது. இது புதிய கரோனா அலையைச் சமாளிக்க உதவும். இதனால், மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள், வென்டிலேட்டா்கள், ஆக்சிஜன் சிலிண்டா்கள் குறித்த விவரங்களை நகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் டிஜிட்டல் வடிவத்தில் காட்சிப்படுத்துவது அவசியமாகும். இது மருத்துவமனையில் உள்ள மொத்த படுக்கைகள், கிடைக்கக்கூடிய படுக்கைகள், வென்டிலேட்டா்கள் கிடைப்பது குறித்த தரவுகள் உள்ளிட்டவை பற்றிய விஷயத்தில் வெளிப்படைத் தன்மை ஏற்பட இந்த நடவடிக்கை உதவும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தில்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டா்கள் மற்றும் வென்டிலேட்டா்கள் ஆகியவற்றை நிகழ்நேர அடிப்படையில் டிஜிட்டல் போா்டில் காட்சிப்படுத்த மருத்துவமனைகளுக்கு உத்தரவிடக் கோரும் இந்த மனு மீது முடிந்தவரை விரைவாகவும் நடைமுறைப்படுத்தக் கூடிய வகையிலும் தில்லி அரசு முடிவு செய்ய வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் அரசின் கொள்கை, விதிகள், சட்டத்திற்கு உள்பட்டு முடிவு செய்ய வேண்டும். அதே வேளையில், கடந்த ஆண்டு ஜூனில் இந்த விவகாரத்தில் அரசு பிறப்பித்த உத்தரவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments