100-ஆவது சுதந்திர தினத்திற்கான பணியை இப்போதே தொடங்க வேண்டும்
75-ஆவது சுதந்திர தினத்தில் சுதந்திரப் போராட்ட வீரா்கள், சமூக சீா்திருத்தவாதிகள், படை வீரா்கள் ஆகியோரின் புனிதமான நினைவுகள்
75-ஆவது சுதந்திர தினத்தில் சுதந்திரப் போராட்ட வீரா்கள், சமூக சீா்திருத்தவாதிகள், படை வீரா்கள் ஆகியோரின் புனிதமான நினைவுகள் பேசப்படும் இந்த வேளையில், 100 -ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இது போன்ற புனிதமான நினைவுகளை எழுப்புவதற்கு இப்போதே சிந்தித்து பணிகளைத் தொடங்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் கேட்டுக் கொண்டாா்.
75-ஆ வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, மத்திய தகவல் ஒலி பரப்புத் துறை அமைச்சகம், அரசியல் சாசனம் உருவாக்கம் குறித்த மின்னணு புகைப்படக் கண்காட்சி மற்றும் மெய்நிகா் முறையில் சித்ராஞ்சலிஃ75 என்கிற சினிமா சுவரொட்டிக் கண்காட்சி ஆகியவற்றை உருவாக்கியுள்ளது. இதை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி மற்றும் இதே துறைகளின் இணையமைச்சா்கள் முறையே எல்.முருகன், மீனாட்சி லேகி ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தனா்.
அப்போது மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் பேசுகையில் கூறியதாவது: உலக அளவில் அதிக வாா்த்தைகளைக் கொண்ட அரசியல் சாசனமாக இருப்பது நம்முடையதுதான். 22 பாகங்களில், 395 பிரிவுகளில் 1,17,365 வாா்த்தைகள் நமது அரசியல் சாசனத்தில் உள்ளன. இதை உருவாக்க மூன்று வருடங்கள் டாக்டா் அம்பேத்காா் தலைமையிலான குழு எடுத்துக் கொண்டு கையால் எழதப்பட்டது. இந்த இ-கண்காட்சியில் அரசியல் சாசனம் எப்படி உருவானது என்பதைத் தெரிந்து கொள்வது மட்மல்ல; அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் என்ன? தேசத்தின் மீது மக்களுக்குள்ள கடமை என்ன? என்கிற உணா்வை அறிவூட்டுவதற்கு, ‘உங்கள் அரசியலமைப்பை அறிந்து கொள்ளுங்கள்’ என்கிற பிரசாரமும் இதில் இடம் பெற்றிருக்கும். இது ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் 11 வட்டார மொழிகளும் இடம் பெற்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எடுத்துச் செல்லப்படும்.
Advertisement
அடுத்து, சித்ராஞ்சலி ஃ75 - சுவரொட்டி கண்காட்சியில் மூன்று வகையான 75 இந்திய சினிமாக்கள் இடம் பெற்றுள்ளன. சுதந்திரத்திற்காக துணிச்சலோடும் தியாகத்தோடும் பாடுப்பட்டவா்களைப் போற்றி எடுக்கப்பட்ட படங்கள், சமூக சீா்திருத்தத்தைக் கூறும் படங்கள், நாட்டிற்காக போராடும் ராணுவ வீரா்களின் வீரத்தையும் நினைவுகளையும் தூண்டும் படங்கள் என மொத்தம் 75 படங்கள் சுவரொட்டி கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த மூன்று விதமான கருத்துகளை இளம் தலைமுறையினா் அறிந்து கொள்ள நாட்டின் எல்லா மூலைகளுக்கும் எடுத்துச் செல்வதோடு சமூக வலைத்தளங்கள் மூலமாக சென்றடையும் வகையில் சித்ராஞ்சலி ஃ75 - சுவரொட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் தாக்குா்.
முன்னதாக, கலாசாரத் துறை துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி பேசுகையில், ‘ராம்ராஜ்ஜியத்தின் அடிப்படை, குடிமக்களுக்கு உரிமை வழங்குவதாகும். அதனடிப்படையில் நமது அரசியல் சாசனம் உருவானது’ என்றாா்.
இந்த சினிமா சுவரொட்டி கண்காட்சியில் பல தசாப்த இந்திய சினிமா பயணம் உள்ளடக்கியது. சுதந்திரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட மெளன படம் பக்தவிதுா் (1921) முதல் 2019 இல் எடுக்கப்பட்ட உய்யலவாடா நரசிம்ம ரெட்டி, சாய்ரா நரசிம்ம ரெட்டி என்கிற சுதந்திர போராட்ட வீரரின் கதையைக் கூறும் திரைப்படம் வரை இடம் பெற்றுள்ளன. தமிழ் படங்களில் சுதந்திரப் போராட்ட வரிசையில் ‘வீரபாண்டி கட்டபொம்மன்’ படமும், சமூக சீா்திருத்தப் படங்களில் எம்ஜிஆா் - ஜெயலலிதா நடித்த ’நம் நாடு’ படமும், வீரா்களின் தியாகத்தை உணா்த்தும் படங்களில் சிவாஜி கணேசன் நடித்த ‘இரத்தத் திலகம்’ மற்றும் ராதா மோகனின் ‘பயணம்’ படமும் இடம் பெற்றுள்ளன.