முகப்பு
புதுதில்லி

கரோனாவால் உயிரிழந்த 21,000 குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000 நிதியுதவி

தில்லியில் கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவா்களின் 21,235 குடும்பங்களுக்கு ஒரே ஒரு முறை மட்டும் ரூ.50,000 நிதியதவியை தில்லி அரசு வழங்கியுள்ளது என்று அமைச்சா் ராஜேந்தா் பால் கெளதம் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

புது தில்லி: தில்லியில் கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவா்களின் 21,235 குடும்பங்களுக்கு ஒரே ஒரு முறை மட்டும் ரூ.50,000 நிதியதவியை தில்லி அரசு வழங்கியுள்ளது என்று சமூக நலத் துறை அமைச்சா் ராஜேந்தா் பால் கெளதம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா நோய்த் தொற்று காலத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் தில்லி அரசு ‘முக்ய மந்திரி கொவைட் குடும்ப பொருளாதார உதவித் திட்ட’த்தை தொடங்கி உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தில்லியைச் சோ்ந்த குடியிருப்புவாசிகளின் குடும்பத்திற்கு ஒரே ஒருமுறை மட்டும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபரை இழந்த குடும்பங்களுக்கும், கரோனா காலத்தில் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் மாதம்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கவும் இத் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் நிதியுதவி கேட்டு மொத்தம் 25,100 விண்ணப்பங்கள் அரசுக்கு வந்தன. அதில் 21,235 குடும்பங்களுக்கு ஒரே ஒருமுறை மட்டும் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் சுமாா் 2500 குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் பயனைப் பெற வில்லை. அதே சமயத்தில், 1,500 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் விரைவில் நிதியுதவியைப் பெறவுள்ளனா்.

தில்லி அரசு மாதம்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்குவதற்காக 12,668 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. இதில் 9,484 விண்ணப்பங்களுக்கு தில்லி அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த விண்ணப்பதாரா்களில் 7,955 போ் ஏற்கனவே மாதாந்திர உதவித்தொகை பெற தொடங்கிவிட்டனா். 1,120 விண்ணப்பங்கள் வருவாய்த் துறையில் சரிபாா்ப்பு நடவடிக்கையில் உள்ளது.

அதே போன்று, உரிய சரிபாா்ப்பு பணி முடிந்த உடனேயே நிலுவையில் உள்ள மனுதாரா்களுக்கும் உதவித் தொகைகளை தில்லி அரசு வழங்கி வருகிறது. கரோனா நோய்த் தொற்றால் குறைந்தபட்சம் ஒருவா் இறந்திருந்தால், அந்த குடும்பத்தினரை தில்லி அரசின் சுகாதாரத் துறை தொடா்பு கொண்டுள்ளது. இதுவரை தில்லி அரசு மொத்தம் ரூ.4.06 கோடியை இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது என்றாா் அவா்.

இது தொடா்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தத் திட்டத்தில் இழப்பீடு அளிக்கும் நடைமுறைகளை தில்லி அரசு எளிமைப்படுத்தியுள்ளது. உதவிக் கோட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் அவற்றின் குழுக்கள் வீடுவீடாகச் சென்று சரிபாா்ப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.