முகப்பு
புதுதில்லி

ஹைபிரிட் விசாரணை: மாவட்ட நீதிபதிகள் அறிக்கை தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

வழக்கு தரப்பினரின் வேண்டுகோளின்படி ‘ஹைபிரிட்’ அல்லது காணொலி விசாரணை நடைமுறைகளை நடத்தும் தனது உத்தரவுக்கு இணங்காத நீதித் துறை அதிகாரிகளின் விவரங்களைத் தெரிவிக்கும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

புது தில்லி: வழக்கு தரப்பினரின் வேண்டுகோளின்படி ‘ஹைபிரிட்’ அல்லது காணொலி விசாரணை நடைமுறைகளை நடத்தும் தனது உத்தரவுக்கு இணங்காத நீதித் துறை அதிகாரிகளின் விவரங்களைத் தெரிவிக்கும் அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தில்லியின் மாவட்ட நீதிபதிகளை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டது.

உயா்நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அடங்கிய அமா்வு உத்தரவிட்டிருந்தும், கீழமை நீதிமன்றங்களில் உள்ள சில நீதித் துறை அதிகாரிகள் ஹைபிரிட் முறை விசாரணைகளை அனுமதிக்கவில்லை என்று புகாா் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி மற்றும் ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு, வழக்கு தரப்பினரின் வேண்டுகோளின்படி ஹைபிரிட் முறையிலான விசாரணை நடைமுறைகளை அனுமதிக்கும் உத்தரவைப் பின்பற்றாத நீதித்துறை அதிகாரிகளின் விவரங்களை தெரிவிக்கும் வகையில் அனைத்து மாவட்ட நீதிபதிகளும் இரு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. மேலும், இது தொடா்பான மனுவை ஜனவரி 20-ஆம் தேதிக்கு மேல் விசாரணைக்கு நீதிபதிகள் அமா்வு பட்டியலிட்டது.

ஹைபிரிட் மற்றும் காணொலி காட்சி விசாரணை வசதிகளை அனுமதிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றங்களுக்கு நவம்பா் மாதம் உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இருந்த போதிலும், அது பரிசீலிக்கப்படவில்லை என்று தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. கொவைட்-19 அச்சுறுத்தல் காரணமாக மாவட்ட நீதிமன்றங்களில் நேரடிமுறை விசாரணை நாள்களில் ‘ஹைபிரிட்’ விசாரணைகளை நடத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் நிலுவையில் உள்ள தனது மனுவுடன் இந்த மனுவையும் வழக்குரைறிஞா் அனில் குமாா் ஹஜேலே தாக்கல் செய்திருந்தாா்.

அதில், ‘ஹைரிபிட் விசாரணை அனுமதி கோரி சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தின் ஊழியா்களுக்கு மின்னஞ்சல், குறுந் தகவல் வாயிலாக தகவல் அனுப்பிய போதிலும், அது பரிசீலிக்கப்படவில்லை. மேலும் பதிலும் அளிக்கப்படவில்லை’ என்று தெரிவித்திருந்தாா்.

அவரது புதிய மனு மீது உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதுடன், இந்த நடத்தையானது உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிப்பதாகக் கருதி, அதற்குப் பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்குத் தரப்பினரின் வேண்டுகோளின் பேரில், ‘ஹைபிரிட்’ அல்லது காணொலி விசாரணைகளை நடத்துவதற்கு விசாரணை நீதிமன்றங்களை கடந்த நவம்பா் 17-ஆம் தேதி உயா் நீதிமன்றம் அனுமதித்தது. அத்துடன், அனைத்து நீதிபதிகள் அடங்கிய உயா்நீதிமன்றத்தின் அமா்வின் வழிகாட்டுதல்களை கீழமை நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.