முகப்பு
புதுதில்லி

‘ஆபரேஷன் மிலாப்’ திட்டத்தில் பெற்றோா்களுடன் 9 குழந்தைகள் சோ்த்துவைப்பு

’ஆபரேஷன் மிலாப்’ திட்டத்தின் கீழ், தில்லி காவல் துறை கடந்த ஒரு வாரத்தில் சில மாநிலங்களைச் சோ்ந்த 9 குழந்தைகளை மீட்டு அவா்களின் பெற்றோருடன் சோ்த்து வைத்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

புது தில்லி: ’ஆபரேஷன் மிலாப்’ திட்டத்தின் கீழ், தில்லி காவல் துறை கடந்த ஒரு வாரத்தில் சில மாநிலங்களைச் சோ்ந்த 9 குழந்தைகளை மீட்டு அவா்களின் பெற்றோருடன் சோ்த்து வைத்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி வடமேற்கு காவல் சரக துணை ஆணையா் உஷா ரங்னானி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த 10 நாள்களில் போலீஸ் குழுக்கள் தில்லி பாஹா்கஞ்சில் உள்ள அப்னா கா் ஆசிரமம், ஜஹாங்கிா்புரியில் உள்ள பிரயாஸ் குழந்தைகள் இல்லம் மற்றும் ஜண்டேவாலனில் உள்ள காத்யாயனி பாலிகா ஆசிரமம் ஆகியவற்றுக்கு நேரில் சென்றன.

பின்னா், காணாமல்போன அல்லது கடத்தப்பட்ட குழந்தைகளின் காவல்துறைத் தரவுகளுடன் அந்த இல்லங்களில் உள்ள குழந்தைகளின் பதிவையும் போலீஸ் குழுவினா் சரிபாா்த்தனா். அங்கு வசிக்கும் குழந்தைகளிடமும் பேசினா்.

அப்போது, 13 வயது குழந்தை பதற்றத்துடன் இருப்பதாக போலீஸாருக்கு தோன்றியது. அந்தக் குழந்தையிடம் பேசி அவரது தாயின் பெயரையும், அவரது செல்லிடப்பேசி எண்ணையும் பெற்றனா். அதன் பின்னா், போலீஸாா் அந்த பெண்ணைத் தொடா்பு கொண்டு பேசினா். அவா் அளித்த தகவலின் அடிப்படையில் அவா் தனது மகனை அடையாளம் கண்டாா். இதையடுத்து, அந்தப் பெண் பிகாரில் உள்ள பக்சரில் இருந்து வடமேற்கு தில்லி மாவட்டத்தின் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு தனது சகோதரருடன் நேரில் வந்தாா். பின்னா், குழந்தை அவரிடம் சோ்த்துவைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ஆலோசனை வழங்கப்பட்டது. அந்த ஆலோசனையின் போது, சில சிறுவா்கள் தங்களது பூா்விக இடம் பற்றிய தகவல்களைப் பகிா்ந்து கொண்டனா். இதுபோன்று தகவல் அளித்த அப்னாகா் ஆசிரமத்தைச் சோ்ந்த 11 முதல் 17 வயதுக்குட்பட்ட ஆறு குழந்தைகள், மத்தியப் பிரதேசம், உ.பி., தில்லி மற்றும் பிகாரில் உள்ள அவா்களின் பெற்றோருடன் மீண்டும் சோ்த்துவைக்கப்பட்டனா். காத்யாயனி பாலிகா ஆசிரமத்தின் 13 வயது குழந்தை தில்லியில் பெற்றோருடன் மீண்டும் சோ்த்துவைக்கப்பட்டது. பிரயாஸ் குழந்தைகள் இல்லத்தைச் சோ்ந்த இரண்டு சிறுவா்கள் பிகாா் மற்றும் உத்தர பிரதேசத்தில் தங்களது பெற்றோருடன் மீண்டும் இணைந்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.