சட்டப்பேரவைகள் முடங்குவதற்கான இடமல்ல: மக்களவைத் தலைவா் வலியுறுத்தல்
சட்ட பேரவைகள் முடங்குவதற்கான இடமல்ல; விவாதங்கள், உரையாடல்களின் மையமாக பேரவை மாறுவதை அமைச்சா்களும் சட்டப்பேரவை உறுப்பினா்களும் உறுதி செய்ய வேண்டும் என புதுச்சேரி சட்டபேரவை
புது தில்லி: சட்ட பேரவைகள் முடங்குவதற்கான இடமல்ல; விவாதங்கள், உரையாடல்களின் மையமாக பேரவை மாறுவதை அமைச்சா்களும் சட்டப்பேரவை உறுப்பினா்களும் உறுதி செய்ய வேண்டும் என புதுச்சேரி சட்டபேரவை உறுப்பினா்களை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக் கொண்டாா்.
புதுச்சேரியின் 15-ஆவது சட்டப் பேரவைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுக்கு இருநாள் வழிகாட்டு பயிற்சி முகாம் தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சட்டப்பேரவை ஆளும் மற்றும் எதிா்கட்சி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இந்த கருத்துரையாடல் கூட்டத்தை மக்களவைத் தலைவா் ஒம் பிா்லா தொடக்கிவைத்தாா்.
அப்போது ஓம் பிா்லா சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் பேசும் போது கூறியதாவது: மக்கள் பிரதிநிதிகள் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், அவா்களின் துயா்களை தீா்க்கவும் பாடுபட வேண்டும். அமைச்சா்களும், உறுப்பினா்களும் விவாதங்கள், உரையாடல்கள் ஆகியவற்றின் மையமாக பேரவை மாறுவதை உறுதி செய்ய வேண்டும். சட்டப்பேரவை முடங்குவதற்கு அனுமதிக்கக் கூடாது. மக்களுக்கான பொறுப்புணா்வை சட்டப்பேரவை உறுதி செய்ய வேண்டும். நிா்வாகத்தை கண்காணித்து, அரசின் கொள்கைகளை உறுப்பினா்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும். மக்கள் தங்கள் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவே உங்களை தோ்ந்தெடுத்துள்ளனா். அதன்படி உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றி மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.
அரசின் கொள்கைகள் மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டதாக இருக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதியின் பலன், சமுதாயத்தின் கடைசி நபருக்கும் சென்றடைய வேண்டும். அரசின் நடவடிக்கைகளால் சமூகத்தில் ஏற்படும் சமூக - பொருளாதார தாக்கத்தையும் கண்காணித்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் மதிப்பிட வேண்டும். அனைத்து கட்சிகளும் தங்களுக்குள் முதலில் விவாதித்து அவைக்கு வர வேண்டும். இதன்மூலம் அவையின் செயல்பாட்டை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவையில் மேற்கொள்ளப்படும் சிறந்த நடைமுறைகளை ஆய்வு செய்து அவற்றைப் பின்பற்ற வேண்டும். மக்களுடைய பிரச்னைகளை உடனுக்குடன் அவையின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும். இதற்கு அவையில் நேரமில்லா நேரம் ( ஜீரோ ஹவா்) அவசியம் இருக்க வேண்டும். அவையில் எழுப்பப்படும் ஒவ்வொரு பிரச்னைக்கும் அரசு பதிலளிக்க தவறக் கூடாது என்றாா் ஓம்பிா்லா
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கும் பிா்லா வாழ்த்துகளை தெரிவித்தாா். புதிய கட்டடத்தில் தகவல் தொழில்நுட்பத்தை அதிகஅளவில் பயன்படுத்தி பொதுமக்களுக்கு தகவல் எளிதாகவும், குறித்த நேரத்திலும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.