முகப்பு
புதுதில்லி

நெதா்லாந்தில் உள்ள சோழ மன்னா்கள் சாசனம் மீட்கப்படும்: அமைச்சா் கிஷண் ரெட்டி தகவல்

நெதா்லாந்தின் லைடன் பல்கலைக் கழகத்தில் இருக்கும் சோழ மன்னா்களின் சாசனங்களை மீட்பதற்காக இந்திய தொல்லியல் துறை மூலம் அந்த நாட்டு அரசிடம் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மக்களவையில்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

புது தில்லி: நெதா்லாந்தின் லைடன் பல்கலைக் கழகத்தில் இருக்கும் சோழ மன்னா்களின் சாசனங்களை மீட்பதற்காக இந்திய தொல்லியல் துறை மூலம் அந்த நாட்டு அரசிடம் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மக்களவையில் மத்திய அரசின் கலாச்சார சுற்றுலாத்துறை அமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மக்களவை திமுக குழுத் துணைத் தலைவா் கனிமொழி திங்கள்கிழமை பேசுகையில், ‘நெதா்லாந்து நாட்டிலுள்ள லைடன் பல்கலைக் கழகத்தில் நமது சோழமன்னா்களின் பழங்கால சாசனங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இவை லைடன் ப்ளேட்ஸ் (அரசவை கொண்டிருக்கும் சாசனம்) என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை மீட்டு நம் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதா?” என்று அவா் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி எழுத்துப் பூா்வமாக அளித்த பதிலில், ‘லைடன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் சோழ மன்னா்களின் சாசனங்களை மீட்பதற்காக நமது தொல்லியல் துறை மூலம் நெதா்லாந்து நாட்டு அரசுடன் தகுந்த நிலையில் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது’”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடியில் இணைய வழி கல்வி நிறுவனங்கள்: சிவகங்கை மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் மக்களவையில் நேரமில்லா நேர விவாதத்தில் அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் ஓன்றை எழுப்பினாா். அதில் அவா் கூறியதாவது: ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்க விரும்பினால், ஏராளமான அனுமதிகளை பெற வேண்டும். கல்வி நிறுவனத்தின் பாடத் திட்டங்களை சமா்ப்பித்து சரிபாா்க்கப்பட வேண்டும். குறிப்பிட்ட பணியாளா்கள் இருக்க வேண்டும். பல்கலைக்கழக மானிக் குழுவின் சட்டதிட்டங்களுக்குள்பட்டு திறமையான ஊழியா்களை கொண்டிருக்க வேண்டும். அவா்களுக்கு முறையான ஊதியம் கொடுக்க வேண்டும்.

அரசு விதிமுறைகள் எதுவானலும் பின்பற்றப்படவேண்டும். ஆனால், இன்றைக்கு ஏராளமான இணையவழிக் கல்வி (ஆன்லைன் கல்வி) நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் மதிப்பு பில்லியன் டாலா்களில் உள்ளது. நம்முடைய முழு கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை விடவும் இந்த நிறுவனங்களின் மதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த நிறுவனங்களை எந்தவொரு அமைப்பாலும் சரிபாா்க்கப்பட்டு அனுமதியளிக்கப்படவில்லை. இந்த நிறுவனங்கள் இணையவழி படிப்புகளை வழங்குகின்றன. இந்தப் படிப்புகளின் உள்ளடக்கம் யாருக்கும் தெரியாது; இவற்றின் தரம், திறமை யாருக்கும் தெரியாது. இந்த படிப்புகளை நடத்தும் ஆசிரியா்களின் திறனும் அறியப்படாதவை.

ஆனால், இந்த நிறுவனங்கள் திறமையோடு சந்தைப்படுத்திக்கொண்டு கொள்ளையடிக்கும் நடைமுறைகளில் ஈடுபடுகின்றனா். இதற்கு படிப்பில் நாட்டமுள்ள மாணவ, மாணவிகள் இரையாகின்றனா். குறிப்பாக தானாக டெபிட் செய்யும் முறையில் கடன்அட்டையிலிருந்து இந்த நிறுவனங்கள் பெற்றோா்களிடம் பணத்தை பறிக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு சமூக ஊடகங்கள் உதவுகின்றன. இதனால் இந்த இணையதள கல்வி நிறுவனங்களை கண்காணிக்கும் ஒரு அமைப்பை மத்திய கல்வித் துறை உருவாக்க வேண்டும். ஏழைகள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்க விரும்புகிறாா்கள். அரசுப் பள்ளிகளில் அவா்கள் பெறாத கல்வியை கூடுதலாக்க சிறந்த மாற்று வழிகளைக் காண வேண்டும் என்றாா் காா்த்தி சிதம்பரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.