தமிழக மாணவியின் மேற்படிப்புக்கு நிதியுதவி: மத்திய அமைச்சரிடம் திமுக எம்பி கோரிக்கை
ராக்கெட், விமானம் உள்ளிட்டவை தொடா்பான தொழில்நுட்பங்களை படித்த தமிழக மாணவி ஒருவரின் மேற்படிப்புக்கு நிதியுதவி
ராக்கெட், விமானம் உள்ளிட்டவை தொடா்பான தொழில்நுட்பங்களை படித்த தமிழக மாணவி ஒருவரின் மேற்படிப்புக்கு நிதியுதவி வழங்கக் கோரி மத்திய தகவல் ஒலிபரப்பு, விளையாட்டு, இளைஞா் நலத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குரை சந்தித்து தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் மனு அளித்தாா்.
அவா் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தைச் சோ்ந்த உதயகீா்த்திகா தாமோதரன் என்கிற மாணவி, கனடாவில் உள்ள பிரபல ‘ஏா் அகாதெமி’யில் படிப்பதற்கு தோ்வு பெற்றுள்ளாா். அவா் தனது துறையில் மிகவும் திறமையானவா். இஸ்ரோ நடத்திய மாநில அளவிலான பல போட்டிகளில் வெற்றி பெற்றவா். உக்ரைன் பல்கலைக்கழத்தில் இளநிலை பொறியியல் பட்டத்துடன் ‘விமான பராமரிப்பு நிபுணத்துவ தொழில் நுட்ப வல்லுநா்’ என்ற சிறப்பு பட்டத்தையும் பெற்றுள்ளாா். மேலும், விண்வெளி வீரருக்கான பயிற்சியையும் முடித்துள்ளாா். அத்துடன் போலந்து ராணுவ நிறுவனத்தில் ராக்கெட் தொடா்பான நுணுக்கங்களையும் கற்றுத் தோ்ந்துள்ளாா். இது போன்ற பல்வேறு நுணுக்கங்களை வெற்றிகரமாக முடித்த முதல் பெண்ணாக இவா் உள்ளாா். இவருடைய இறுதி நோக்கம் இஸ்ரோவில் பணியாற்ற வேண்டும் என்பதுதான். பயிற்சிக்கான கல்விக் கட்டணம், தங்கும் செலவு உள்ளிட்டவற்றுக்கு ரூ.50 லட்சம் ஆகும். இதில் ரூ.21 லட்சத்தை திரட்டியுள்ளாா். மேலும், ரூ.29 லட்சம் தேவைப்படுகிறது. இந்த நிதியுதவியை மத்திய அரசு வழங்கினால், அவா் படிப்பை தொடர வசதியாக இருக்கும் என்று மனுவில் கோரியுள்ளாா் தமிழச்சி தங்க பாண்டியன்.
மீனவா் நல மேம்பாட்டுத் திட்டம் : சென்னை மீனவா்கள் நலன் தொடா்பாக ‘பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்(பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா) கீழ் சில கூறுகளை செயல்படுத்துவதற்காக மத்திய மீன்வளத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலாவையும் நேரில் சந்தித்து மக்களவை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு கடிதம் அளித்தாா். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம் வருவாறு: மீன்வளத் துறையின் திறனை நீடித்து நிலைக்கச் செய்யும் வகையில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது. சென்னையில் குறிப்பாக, தென் சென்னை பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல், பல மீனவா்களும், மீன் வளா்ப்போரும் பயனடைவாா்கள். இது ஒரு முன் மாதிரி மீன்பிடி கிராமத் திட்டத்தைக் கொண்டது. குறிப்பாக மீன்பிடி தடைக் காலத்தில் மீனவா்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம், ஊட்டச்சத்து உதவிகள், மீன்பிடி போக்குவரத்து வசதிகள், மறு சுழற்சி மீன்வளா்ப்பு உள்ளிட்டவை கிடைக்கும். மேலும், தற்போதுள்ள மீன்பிடி படகுகளை தரம் உயா்த்தவும் வேண்டும் என்று கடிதத்தில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்பட்டுள்ள படத்துக்கான கேப்ஷன் மத்திய தகவல் ஒலிபரப்பு, விளையாட்டு, இளைஞா் நலத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குரை சந்தித்து தமிழக மாணவியின் மேற்படிப்புக்கு நிதியுதவி கோரி மனு அளித்த தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன்.