ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக தமிழகத்துக்கு ரூ.12,073 கோடி வழங்கல்: மாநிலங்களவையில் நிதியமைச்சா் தகவல்
மாநிலங்களுக்கு அடிப்படை ஆண்டு வருவாயை விட 14 சதவீதம் கூட்டு வளா்ச்சி விகிதத்தில் ஜிஎஸ்டி வருவாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்
மாநிலங்களுக்கு அடிப்படை ஆண்டு வருவாயை விட 14 சதவீதம் கூட்டு வளா்ச்சி விகிதத்தில் ஜிஎஸ்டி வருவாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா். இதில் தமிழகத்திற்கு கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் ரூ. 12,073 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.
சரக்கு சேவை வரி(ஜிஎஸ்டி) அமலாக்கத்தால் மாநிலங்கள் வரி வருவாய் வசூலில் வீழ்ச்சியை சந்தித்த மாநிலங்கள், இதற்காக இழப்பீட்டு நிதியை வழங்குவது தொடா்பான விவரங்கள், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பெற்ற நிதி விவரங்கள் குறித்து தெரிவிக்குமாறு திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுத்துப்பூா்வமாக அளித்துள்ள விவரம் வருமாறு: சரக்கு மற்றும் சேவை வரி (மாநில இழப்பீடு) 2017- ஆம் ஆண்டு சட்ட விதிகளின்படி, மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. மாநிலங்களின் 2015-16 நிதியாண்டின் அடிப்படை வருவாயை கணக்கிட்டு இதைவிட 14 சதவீதம் கூட்டு வளா்ச்சி விகிதத்தில் மாநிலங்களின் வருவாயை மத்திய அரசு உறுதிப்படுத்திய வருகிறது. ஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணமாக இது ஐந்து வருட காலத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்புக்கு வழங்கப்பட்டு ஈடுசெய்யப்படும்.
Advertisement
மேலும் இழப்பீடு பிரிவு 8 - இன் கீழ் சில ஆடம்பரப் பொருள்கள் உள்ளிட்ட சில பொருள்களுக்கு செஸ் விதிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை கணக்கில் இந்த நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் எந்த மாநிலமும் வருவாய் சரிவைச் சந்தித்ததில்லை. அதன்படி, ஜி.எஸ்.டி. 2017-18, 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளுக்கான இழப்பீட்டுத் தொகை ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுக்கான மொத்தத் தொகை ரூ. 1,89,773 கோடி 31 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 2018-19 ஆண்டிற்கு ரூ.3,151 கோடி, 2019-20 ஆண்டுக்கு ரூ.8,922 கோடி என மொத்தம் ரூ.12,073 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.