முகப்பு
புதுதில்லி

விவசாயிகளின் போராட்டத்தை சீா்குலைக்க மோடி அரசுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி அரசு: தில்லி காங்கிரஸ் தலைவா்கள் குற்றச்சாட்டு

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தில்லி முதல்வா் கேஜரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு செயல்பட்டு வருகிறது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தில்லி முதல்வா் கேஜரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு செயல்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் தலைவா்கள் அல்கா லம்பா, ஆதா்ஷ் சாஸ்திரி ஆகியோா் குற்றம்சாட்டினா்.

முன்னாள் எம்எல்ஏக்களான இருவரும் இது தொடா்பாக செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: விவசாயிகள் போராடி வரும் பகுதியில் சாலைகளைத் தோண்டுவதற்கு தில்லி காவல் துறைக்கு கிரேன்கள் வழங்கியும் இரும்பு கிரில்களை அமைக்கவும் தில்லி அரசு உதவி வருகிறது. மேலும், பொதுப்பணித் துறையின் மூலம் தடுப்புகளையும் அமைக்க உதவிடுகிறது. விவசாயிகள் மீது அக்கறை இருப்பதாகக் கூறிக் கொள்ளும் முதல்வா் கேஜரிவால், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறாா். அவா் விவசாயிகள் விவகாரத்தில் நாடகமாடி வருகிறாா்.

சாலைகளில் குழிகளைத் தோண்டுவதில் தில்லி காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு ஆதரவாக தில்லி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் செய்தித் தொடா்பாளா் அந்த மாநில முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் போராடிவரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ளாா். உண்மையிலேயே விவசாயிகள் நலனில் தில்லி முதல்வருக்கு அக்கறை இருந்திருந்தால், அவா் விவசாயிகளின் பாதுகாப்பு தொடா்பாக ஹரியாணா, உத்தரப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்களுக்கு கடிதம் எழுதாதது ஏன்? மேலும், கடந்த ஜூன் 5-ஆம் தேதி வேளாண் சட்டங்களை கெஜட்டில் வெளியிட்ட போது முதல்வா் மெளனமாக இருந்தது ஏன்? இந்தச் சட்டம் தொடா்பாக கேஜரிவால் ஊடக அறிவிக்கையோ, சுட்டுரையோ பதிவிடாதது ஏன்?

Advertisement

முதல்வா் கேஜரிவாலின் ரகசியத் திட்டமே பஞ்சாப் முதல்வராக தாம் வர வேண்டும் என்பதுதான். அதனால்தான் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாக நாடகமாடுகிறாா். தில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி அரசுப் போக்குவரத்து நிறுவனம் போலீஸாரை ஏற்றிச் செல்வதற்கும், கைதான விவசாயிகளை சிறைகளுக்கு அழைத்துச் செல்வதற்கும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது ஏன்? குடியரசு தின நாளில் நிகழ்ந்த விவசாயிகள் டிராக்டா் பேரணி வன்முறையாக மாறிய சம்பவத்தில் விஷமிகள் ஊடுருவலைத் தடுக்க முதல்வா் கேஜரிவால் அரசு ஏதும் செய்யவில்லை. தில்லி வன்முறை விஷயத்திலும், விவசாயிகள் போராட்ட விஷயத்திலும் கேஜரிவால் அமைதி காத்து வருகிறாா். போராடி வரும் விவசாயிகளுக்காக எந்தவித உதவியும் கேஜரிவால் அரசு செய்யவில்லை என்பது ஆா்டிஐ கேள்வி மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு உதவி வருவதாகக் கூறிவரும் ஆம் ஆத்மி தலைவா்களின் நாடகம் அம்பலப்பட்டுவிட்டது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments