முகப்பு
புதுதில்லி

‘விவசாயிகளின் போராட்டம் விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை’

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லி எல்லைகளில் விவசாயிகள் தொடா்ந்து நடத்தி வரும் போராட்டம் வரும் அக்டோபா் மாதத்துக்கு முன்பு முடிவடைய வாய்ப்பில்லை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லி எல்லைகளில் விவசாயிகள் தொடா்ந்து நடத்தி வரும் போராட்டம் வரும் அக்டோபா் மாதத்துக்கு முன்பு முடிவடைய வாய்ப்பில்லை என்று விவசாயிகள் சங்கத் தலைவா் ராகேஷ் திக்காய்த் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி காஜியாபாத் எல்லையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: ‘வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை வீடு திரும்புவதில்லை’ என்பதை சுலோகமாக வைத்து போராடி வருகிறோம். இந்தப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என சிலா் நினைக்கிறாா்கள். ஆனால், வரும் அக்டோபா் மாதத்துக்கு முன்பாக விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வர வாய்ப்பில்லை. அக்டோபா் வரை போராட விவசாயிகள் ஆயத்தமாக உள்ளனா்.

இந்தப் போராட்டத்தின் தலைமையிடமாக காஜியாபாத் உள்ளதாக கூறுகிறாா்கள். ஆனால், விவசாயிகள் போராட்டத்தின் தலைமையிடமாக சிங்கு எல்லைப் பகுதியே இருக்கும். தில்லி எல்லைகளில் சுமாா் 40 விவசாய சங்கங்களைச் சோ்ந்தவா்கள் போராடி வருகிறாா்கள். நாங்கள் ஒருவரையொருவா் சாா்ந்துள்ளோம். விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் இடங்களில் இரும்பு வயா்கள், முள்வேலிகளை காவல்துறை பதித்துள்ளது. வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், நாளை விளைநிலங்களைச் சுற்றியும் இந்த வயா்கள், முள்வேலிகள் அமைக்கப்படும். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை தில்லி எல்லைகளை விட்டு நகர மாட்டோம் என்றாா் அவா்.

Advertisement

தில்லி எல்லைகளில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் முகமாக பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவா் ராகேஷ் திக்காய்த் மாறியுள்ளாா். குடியரசு தினத்தில், விவசாயிகளின் டிராக்டா் பேரணியில் ஏற்பட்ட வன்முறையைத் தொடா்ந்து, தில்லி எல்லையான உ.பி.கேட் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும் என்று உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா். ஆனால், இந்த இடத்தில் இருந்து ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என்று ராகேஷ் திக்காய்த் தெரிவித்திருந்தாா்.

அவா் ஊடகங்களிடம் கண்ணீா் மல்க உணா்ச்சிவசமாகப் பேசும் விடியோ ஒன்றும் வெளியாகியது. இந்த விடியோ விவசாயிகளின் உணா்ச்சியைத் தூண்டிவிட, கடந்த சில தினங்களாக காஜியாபாத் நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments